ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்த நிபுணராகத் திகழ்ந்தவர் நாகார்ஜுனர்.
அவருக்குத் தன்னுடைய பரிசோதனைச் சாலையில் உதவி செய்வதற்கு ஓர் ஆள் தேவைப்பட்டது.
அந்த வேலையைப் பெற அவரிடம் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள்.
நாகார்ஜுனர் இரண்டு பேரிடமும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொடுத்து, "இதைப் பயன்படுத்தி இரண்டு நாட்களில் ஒரு மருந்துக் கலவையைத் தயார் செய்து கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓர் இளைஞன் ஒரு மருந்துக் கலவையுடன் வந்தான்.
அவனிடம், “உனக்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டதா?” என்று கேட்டார் நாகார்ஜுனர்.
இளைஞன், "என் தாய்க்குக் கடுமையான காய்ச்சல். தந்தைக்கு வயிற்றுப்போக்கு. என் தம்பியின் கால் எலும்பு முறிந்து விட்டது. இருந்தாலும் நான் என் சாதனையில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன்" என்று கர்வத்துடன் பதிலளித்தான்.
இரண்டாவது இளைஞன் வந்து, “ஐயா, என்னால் நீங்கள் குறிப்பிட்டபடி மருந்து தயாரிக்க இயலவில்லை. நான் இங்கிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் நோய்வாய்ப்பட்ட ஒரு வயோதிகரைப் பார்த்தேன். அவருக்கு உதவியாக யாரும் இல்லாததால், நானே அவரை மூன்று நாட்கள் கவனித்துக் கொண்டேன்” என்றான்.
"மருந்து உயிரைக் காப்பாற்றத்தான் இருக்கிறது. அதைத் தயாரிப்பவர் உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில் பாராமுகமாக இருந்தால் அவரை நான் எப்படி ஏற்பது? ஆகவே இரண்டாவது இளைஞனே என் மாணவன்” என்றார் நாகார்ஜுனர்.