பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் தெற்குக் கடற்கரையோரத்தில் வசித்து வந்த ஒரு பிஷப், மேற்குக் கடற்கரையோரம் இருந்த ஒரு சமயக் கல்லூரிக்குச் சென்றார்.
அங்கிருந்த போது, அக்கல்லூரியில் அறிவியல் பேராசிரியரான ஓர் இளைஞனுடன் தன் அறையைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பேராசிரியர் ஒரு நாள் பிஷப்பைச் சந்திக்கத் தன் நண்பர்களை அழைத்து வந்தார்.
பிஷப் பேசுகையில், "'முதலாம் ஆயிரம் ஆண்டு' இன்னும் சில வருடங்களில் முடிவிற்கு வந்துவிடும். இயற்கையில் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை எல்லாம் கண்டுபிடித்தாகிவிட்டது; இனிமேல் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை எதுவுமில்லை” என்றார்.
அதற்குப் பேராசிரியர் உடன்படவில்லை. 'கண்டுபிடிப்புகளின் வாயிற்படியில்தான் உலகம் உள்ளது' என்று கூறினார்.
பிஷப் அவரிடம், ''சரி, அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கூறுங்கள்” என்று சவால் விட்டார்.
பேராசிரியர், "இன்னும் ஐம்பது வருடங்களில் மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலையைக் கற்றுக் கொண்டு விடுவான் என்று நம்புகிறேன்” என்றார்.
பிஷப் பலமாகச் சிரித்து, "நண்பரே, பைத்தியம் போல் பேசாதீர்கள். கடவுள் மனிதன் பறக்க வேண்டும் என நினைத்திருந்தால், அவர் மனிதனுக்கு இறக்கைகளைத் தந்திருப்பார். பறப்பது, பறவைகளுக்கும் தேவதைகளுக்கும் மட்டும்தான்” என்றார்.
அந்த பிஷப்பின் பெயர் 'ரைட்'. அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள், 'ஆர்வில், 'வில்பர்' என்பவர்கள். அவர்கள்தான் முதல் ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!