ஷிவ் கேரா என்ற இந்தியர் உலகப் புகழ் வாய்ந்த மேலாண்மைப் பயிற்சியாளர். அவர் சிங்கப்பூரில் தாம் கற்ற ஒரு பாடத்தை விவரிக்கிறார்:
சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நான் பயணித்த டாக்ஸி ஓட்டுநரிடம் ஒரு நண்பரின் 'விஸிட்டிங் கார்டை'க் கொடுத்து, அந்த முகவரிக்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டினேன்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. டாக்ஸியின் மீட்டர் டாலர் 11 என்று காட்டியது. ஆனாலும் டிரைவர் என்னிடமிருந்து டாலர் 10 மட்டுமே பெற்றுக் கொண்டார்.
அதைப் பற்றிக் கேட்டபோது அவர் கூறினார்:
"சார்! நான் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இடம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருந்தது. நான் நேராக இந்த இடத்திற்கு உங்களை அழைத்து வந்திருந்தால் மீட்டரில் டாலர் 10 என்றே குறிப்பிட்டிருக்கும். ஆனால் என் அறியாமை காரணமாக நீங்கள் ஏன் அதிகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்?”
மேலும் அவர், "சார்! சட்டப்படி, நான் டாலர் 11 உங்களிடமிருந்து கேட்டுப் பெற முடியும். ஆனால் நியாயப்படி எனக்குச் சேர வேண்டியது டாலர் 10 மட்டுமே!” என்றார்.
நான் வியப்பில் இருந்து மீள்வதற்குள் தொடர்ந்தார்:
"சார்! சிங்கப்பூர் ஒரு சுற்றுலாத் தலம். பலவித மக்கள் இங்கு 3 அல்லது 4 நாட்களுக்குக் குறுகிய காலப் பயண நோக்குடன் வருகிறார்கள்.
''அவர்கள் வந்து இறங்கியவுடன் விசா, சுங்கப் பணிகளெல்லாம் முடிந்த பின்பு, அவர்களது முதல் அனுபவம் எப்பொழுதும் ஒரு டாக்ஸி ஓட்டுநருடன்தான் அமைகிறது. அந்த அனுபவம் நல்லபடியாக அமையாவிட்டால், மீதமுள்ள அவர்களது 3, 4 நாட்களும் மகிழ்ச்சிகரமாக அமையாது”
என் வியப்பு முடியவில்லை. மேலும் அவரே தொடர்ந்து, "சார்! நான் சாதாரண டாக்ஸி டிரைவர் அல்ல! சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறையின் சட்டபூர்வமான அங்கீகாரம் பெறாத ஒரு தூதுவன் நான்!” என்றார்.
நான் பேச்சிழந்து நின்றேன். அவர் 8–ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவரது செயல்பாடும், பணிவும் அவரது உயர்ந்த நடத்தையைப் பிரதிபலித்ததைக் கண்டேன். அன்றுதான் நான் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டேன்.
'தொழில், கல்வி இவற்றைவிட இன்னும் அதிகமாகத் தேவைப்படுவது எது?'
இதனை ஒரே வரியில் கூறலாம்:
'எந்தப் பணியும் சிறப்பாகப் பரிமளிக்க எவருமே, மனிதநேயத்தையும் தர்மத்தையும் செயல்முறைப்படுத்த வேண்டும்'
அதன் பிறகுதான் அறிவு, திறமை, செல்வம், கல்வி ஆகிய அனைத்தும் வரும். முதலில் வரவேண்டியது நம்பகத்தன்மை (Integrity). நீங்கள் ஒரு தொழிலைச் செய்வதல்ல முக்கியம்; அந்தப் பணியை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது.