மகாவீரர் துறவறம் மேற்கொண்ட சமயம். இந்திரன் அவருக்கு தெய்விக ஆடை ஒன்றை அளித்தான்.
சோமதத்தன் என்பவன் யாசித்து வந்தான். அவனுக்குப் பாதி ஆடையைத் தந்தார் வர்த்தமானர்.
இந்திரனால் வழங்கிய ஆடை விலைமதிப்பற்றது என்பதால், வர்த்தமானர் தவத்தில் இருக்கும் சமயம், சோமதத்தன் மீதி ஆடையை அவரிடமிருந்து திருடிச் சென்றுவிட்டான்.
நிஷ்டை கலைந்து கண் விழித்த வர்த்தமானர், ஆடை திருடப்பட்டிருப்பதைக் கண்டார்.
முதலிலேயே சோமதத்தனுக்கு முழு ஆடையையும் தந்திருந்தால், அவன் திருடியிருக்க மாட்டானே என எண்ணி, அவனது திருட்டிற்குத் தாம் காரணமாகி விட்டோமே என்று நினைத்து வருந்தினார்!
பிறர் மனதில் களவாடும் ஆசையைத் தூண்டும் எந்தப் பொருளும் இனி தம்மிடம் இருக்கக் கூடாது என்று தீர்மானித்தார்.
அன்று முதல் திசைகளையே ஆடையாகக் கருதி, திகம்பரராகவே வாழ்ந்தார் மகாவீரர்.