ஒரு சமயம் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு தெருவில் சிறுவர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் ஒரு விக்கிரகத்தை வைத்துக் கொண்டு, கோவில்களில் நடக்கும் தெய்வ வழிபாடுகளைப் போலச் செய்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். தாங்கள் தெய்வத்துக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதாகவே நினைத்து அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் ராமானுஜரின் சீடர்களில் ஒருவர், “ஆசார்யருக்கு வழி விடாமல் இப்படியா நின்று கொண்டிருப்பது? நகர்ந்து போங்கள்!” என்று அந்தச் சிறுவர்களைக் கண்டித்தார்.
அவர் அதட்டியதைக் கேட்ட ஒரு சிறுவன் சுருக்கென்று, "உங்களுக்கு உங்கள் ஆசார்யர் உயர்ந்தவராக இருந்தால், எங்களுக்கு நாங்கள் இப்போது இங்கே வைத்துப் பூஜித்துக் கொண்டிருக்கும் தெய்வம் அவரை விட உயர்ந்தது!" என்றான்.
சிறுவனின் பதிலைக் கேட்டு ராமானுஜரின் உள்ளம் உருகியது.
ராமானுஜர் அந்தப் பையன்களுடன் பூஜை முடியும் வரை இருந்து, கடைசியில் சிறுவர்கள் தந்த பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு, பிறகுதான் மேலே சென்றார்.