ஒரு முறை காந்திஜி, ரவீந்திரநாத் தாகூரின் அழைப்பின் பேரில் சில நாட்கள் சாந்திநிகேதனில் தங்கியிருக்கச் சென்றார். ஒரு நாள் அதிகாலையில் மகாத்மாவும், கவியரசரும் உலாவச் சென்றனர்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுது! மலர்ந்தும் மலராத ஒரு ரோஜா மொட்டின் மேல் பனித்துளிகள்! அவற்றின் மீது பட்ட சூரியனின் கிரணங்கள் செய்த வண்ணஜாலங்கள்! இருவரும் சொல்லி வைத்தாற் போல் அந்த வர்ணனைக்கு அப்பாற்பட்ட அழகை ரசிக்க ''ப்ரேக்'' போட்டது போல் நின்று விட்டனர்!.
ரவீந்திரர் சொன்னார்: ''ஆஹா! என்ன அழகு! எனக்கு ஒரு கவிதை எழுத வேண்டும்போல் தோன்றுகிறது. உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?” என்று கேட்டார்.
மகாத்மாகாந்தி, ''நான் ஒரு கவி அல்ல; என் உள்ளத்தில் கவித்துவம் கிடையாது. ஆனால் இந்த மொட்டுக்களைப் பார்த்தால் நம் நாட்டுக் குழந்தைகளின் நினைவு வருகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் இந்த அரும்புகளைப் போலவே ஆரோக்கியம், அழகு, மலர்ச்சியுடன் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் வாழும்படி ஆக வேண்டும் என்பதே என் ஆசை'' என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
ஒரே காட்சிதான். ஆனால், இரு உயர்ந்த மனிதர்களின் உள்ளத்தில் இரு வெவ்வேறான உன்னதமான எண்ணங்களைத் தோற்றுவித்தது!