கனகதாசரின் குருநாதர் வியாசராயர். அவர் ஒருமுறை எல்லோரும் கூடியிருக்கிற நேரத்தில் கனகதாசரைப் பார்த்து, ''கனகா, இங்கிருப்பவர்களில் யார் யார் வைகுந்தம் போவார்கள் என்று உன் கடவுளிடம் கேட்டுச் சொல்'' என்றார்.
கனகதாசர் அடுத்த நாள் பதில் சொல்வதாகக் கூறினார்.
மறுநாள், வியாசராயர் ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டி, "இவர் வைகுந்தம் போவாரா?'' என்று கேட்டுக் கொண்டே வந்தார்.
"இல்லை'' என்றே பதில் சொல்லிக் கொண்டு வந்தார் கனகதாசர்.
"நான் போவேனா?'' என்றார் குருநாதர்.
"இல்லை" என்று பதில் வந்தது.
குருநாதருக்கே திகைப்பு. ''நீ போவாயா?'' என்று வினவினார்.
''நான் போனால் போவேன்'' என்றார் கனகதாசர். இது ஆணவத்தின் உச்சம் என்று எல்லோரும் திகைத்தார்கள்.
கனகதாசர் விளக்கினார்: ''நான் மட்டும் வைகுந்தம் போவதாக நான் சொல்லவில்லை. 'நான் என்பது' போனால் - அதாவது ஆணவம் அழிந்தால் - எல்லோருமே வைகுந்தம் போகலாம்''