எகிப்தில் ஒரு மடம். அம்மடத்திலிருந்த அனஸ்தேசியஸ் என்ற பாதிரி தமது நூலகத்தில் புராதனமான விலை மதிப்பற்ற பல நூல்களை வைத்திருந்தார்.
ஒரு நாள் விருந்தாளி ஒருவர் அவரைக் காண வந்தார். விலையுயர்ந்த புத்தகங்களைக் கண்டதும் அவருக்கு அடக்க முடியாத ஆவல் ஏற்பட்டது. அதனால் ஒரு புத்தகத்தைத் திருடிச் சென்றுவிட்டார்.
அப்புத்தகம் காணாமல் போனது அன்றைக்கே தெரிய வந்தது. அதை யார் எடுத்துச் சென்றிருப்பார் என்பதும் பாதிரிக்குத் தெரிய வந்தது.
ஆனால் அதை எடுத்துச் சென்றவரைப் பற்றிப் புகார் தர அவர் மறுத்தார்.
அதைக் களவாடிச் சென்றவர், திருடியதோடு பொய்யும் சொல்வானேன் என்று சும்மாயிருந்துவிட்டார்.
நூலைத் திருடியவர் அதை விற்க முயன்றார். பழம் பொருள் சேகரிக்கும் ஒருவரைக் கண்டு அதற்கு விலை பேசினார்.
அவரோ, “அந்த நூலைத் தகுந்தவரிடம் காட்டி மதிப்பிடச் சொல்லி பிறகு வாங்கிக் கொள்கிறேன்’’ என்று நூலை வாங்கி வைத்துக் கொண்டார்.
நூலை வாங்க விரும்பியவர் அதை அனஸ்தேசியஸிடம் எடுத்துச் சென்று அதன் மதிப்பு என்ன? என்று கேட்டார்.
அனஸ்தேசியஸுக்கு அது அவரது புத்தகம்தான் என்று தெரிந்தது. ஆனால் வந்தவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அதை வாங்க விரும்பியவர், “இதை என்னிடம் தந்தவர் ஒரு சவரன் விலை கேட்டார். உங்களுக்குத்தான் இதன் மதிப்பு தெரியும். இதற்கு என்ன விலை தரலாம்?’’ என்று கேட்டார்.
அனஸ்தேசியஸ், “ஓ! இது விலை மதிப்பற்றது. இதற்கு ஒரு சவரனுக்கும் மேலாகவே கொடுக்கலாம்’’ என்றார்.
வந்தவர் வணங்கிவிட்டுச் சென்றார்.
மறுநாள் நூலைத் திருடியவர், “யாரிடம் இதன் மதிப்பைக் கேட்டீர்கள்?’’ என்று கேட்டார்.
“அனஸ்தேசியஸ் என்ற பாதிரியிடம்தான் கேட்டேன்’’
“அவர் என்ன சொன்னார்?’’
“ஒரு சவரனுக்கு மேலாக விலை தரலாம் என்றார்’’
“வேறு ஏதேனும் சொன்னாரா?’’
“இல்லை’’
அதைக் கேட்டதும் திருடியவன் மிகவும் வருந்தினான்.
அனஸ்தேசியஸின் செயல் அவனது மனதைத் தொட்டது.
“ஆஹா! இதை நான் திருடியது தெரிந்திருந்தும், என்னைப் பற்றிப் புகார் செய்யவோ, என் மேல் நடவடிக்கை எடுக்கவோ அவர் விரும்பவில்லையே! இதுபோல் யாருமே என்னிடம் அன்போ, இரக்கமோ செலுத்தியதில்லையே! சே! இவருக்குத் துரோகம் செய்வதா!’’ என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.
“ஐயா! நான் இதை விற்க விரும்பவில்லை. அதைத் திருப்பித் தந்து விடுங்கள்’’ என்றார்.
பிறகு, நேராக மடாலயம் சென்று கண்ணீருடன் அனஸ்தேசியஸ் பாதிரியாரிடம் புத்தகத்தைக் கொடுத்தார்.
“என்னை மன்னித்துவிடுங்கள். என்னையும் உங்கள் சீடனாக்கிக் கொள்ளுங்கள்’’ என வேண்டினார்.
புத்தகத்தைத் திருடியவன் பின்னாளில் புனிதமிக்க மகான் ஆனார் .