அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார்.
அவர் ஒரு நாள் கால்நடையாக உலாவச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஒரு துடிப்பான, உடல் வலிமை மிக்க இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ள முயன்று கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த கோடீஸ்வரர் ராக்பெல்லர் அந்த இளைஞனை நோக்கி ஓடிச்சென்று அவனைத் தடுத்து நிறுத்தி, “இளைஞனே! நீ ஏன் இவ்விதம் உன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், “ஐயா! நான் நன்றாகப் படித்திருக்கிறேன். ஆனால் அந்தப் படிப்பிற்கு ஏற்ற வேலை எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், போதிய ஊதியம் இல்லை; என்னுடைய வாழ்க்கை வசதியாக இல்லை. ஆகவே வெறுப்பினால் தற்கொலை 'செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன்” என்று தெரிவித்தான்.
மேலும் அவன், “என்னைத் தடுக்கும் நீங்கள் யார்?” என்று வினவினான்.
அதற்கு ராக்பெல்லர், தான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உடனே இளைஞன் அவரிடம், நீங்கள் செல்வந்தர். ஆகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் செல்வத்தையெல்லாம் என்னிடம் தந்தால் உங்களைப் போல் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்; தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். உங்களால் உங்கள் செல்வம் முழுவதையும் எனக்கு மாற்றித் தர முடியுமா?” என்றான்.
ராக்பெல்லர் உடனே அதற்குச் சம்மதித்து "சரி, நீ சொல்வது போல் நான் செய்கிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நான் கேட்பதை நீ எனக்குத் தருவாயா?” என்று கேட்டார்.
அதற்கு இனைஞனும் உடன்பட்டு, நீங்களோ உலகப் புகழ் பெற்ற பணக்காரர். நானோ பரம ஏழை. உங்களிடம் இல்லாதது, உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?” என்று வினவினான்.
ராக்ஃபெல்லர், “உன்னிடமுள்ள விலை மதிப்பில்லாத இளமையை நீ எனக்குத் தந்தால், அதற்கு ஈடாக நான் என் செல்வம் முழுவதையும் உனக்குத் தருகிறேன்” என்றார்.
பிறகு அவர், “எத்தனை செல்வம் இருந்தாலும் அது இளமைக்கு ஈடாகாது” என்பதை விளக்கி, இளமையின் முக்கியத்துவத்தை இளைஞனை உணரும்படி செய்தார்.
அதோடு அவர், இளைஞனை அவனது கல்விக்கு ஏற்ற வேலையிலும் ஊதியத்திலும் அமர்த்தினார்.