மாபெரும் தத்துவஞானி சாக்ரடீஸிடம், "நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?" என்று ஒருவர் பேச ஆரம்பித்தார்.
சாக்ரடீஸ் அவரை இடைமறித்து, "நண்பனே! கொஞ்சம் பொறு. நீ சொல்ல வந்ததை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்த்தாயா?" என்று கேட்டார்.
"மூன்று சல்லடைகளா? கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்” என்று அந்த நண்பர் கேட்டுக் கொண்டார்.
"முதல் சல்லடை உண்மையில்லாதவைகளைத் தடுத்து நிறுத்திவிடும். நீ சொல்ல வந்தது உண்மையானதா?"
"அது உண்மையானதா என்பது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்ததைத்தான் நான் உங்களிடம் சொல்ல வந்தேன்"
"சரி! நீ சொல்ல வந்தது உண்மையானதா என்று உனக்கே தெரியாது. நீ சொல்ல வந்த செய்தி நல்ல செய்தியாக இருக்க வேண்டும். இரண்டாவது சல்லடை கெட்ட செய்திகளைத் தடுத்து நிறுத்திவிடும்"
"நான் சொல்ல வந்தது நல்ல செய்தி இல்லை"
"நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்; சந்தோஷம் தருவதாக இருக்க வேண்டும்; மூன்றாவது சல்லடை மற்றவர்களுக்குத் துன்பம் தரும் செய்திகளைத் தடுத்து நிறுத்திவிடும்"
"நான் சொல்ல வந்த செய்தியால் யாருக்கும் நன்மையோ, அல்லது சந்தோஷமோ ஏற்படப் போவதில்லை”
"நீ என்னிடம் சொல்ல வந்த செய்தி உண்மையானது அல்ல. அது நல்ல செய்தியும் கிடையாது. அந்தச் செய்தியைக் கேட்பதால் யாருக்கும் நன்மையோ அல்லது சந்தோஷமோ ஏற்படப் போவதில்லை. அப்படிப்பட்ட செய்தியைப் பற்றிப் பேசி நாம் நம் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க கூடாது. உலகத்தில் எவ்வளவோ உண்மையான நன்மை தரும் விஷயங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட விஷயம் ஏதாவது இருந்தால் சொல்” என்று சாக்ரடீஸ் அவனிடம் சொன்னார்.