அமெரிக்காவின் சிகாகோ நகரில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான், இந்து மதத்தின் பெருமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ‘சகோதர சகோதரிகளே’ என ஆரம்பித்த உரைக்குள் உலகத்தையே அடக்கி விட்ட ஞானி இவர்.
சிகாகோவில் நடந்த உலகச் சமயங்கள் மாநாட்டில், இந்து சமயத்தின் சார்பில் பங்கேற்க, விவேகானந்த தயாராகிக் கொண்டிருந்தார்.
அதற்கான அனுமதி பெற, குரு ராமகிருஷ்ணரின் துணைவியார் சாரதாதேவியாரைச் சந்திக்க வந்தார்.
அப்போது அம்மையார் சமையல் செய்து கொண்டிருந்தார்.
காய்கறிகளை நறுக்கி விட்டு, அடுத்தப் பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் ‘அம்மா’ என்ற குரல் கேட்டது.
குரலைக் கொண்டே, அது விவேகானந்தர் என்பதைப் புரிந்து கொண்டார் அந்த அம்மையார்.
“வா நரேன்”அம்மையாரின் அழைப்புக் குரல் கேட்டதும், நேராகச் சமையல் கட்டுக்கே சென்றார் விவேகானந்தர்.
அம்மையார் அவரிடம் ஏதும் பேசவில்லை. ஆனால், அவர் எதற்காக வந்துள்ளார் என்பது அவருக்குத் தெரியும்.
“நரேன்... அந்தக் கத்தியை எடுடா” என்றார்.
விவேகானந்தர் அதை எடுத்து நீட்டினார்.
கத்தியைக் கீழே வைத்த அம்மையார்,“சரி... நீ சிகாகோ புறப்படலாம், உனக்கு என் ஆசிர்வாதம்” என்றார்.
தான் கத்தியை எடுத்துக் கொடுத்ததற்கும், சிகாகோ செல்ல அனுமதி கிடைத்ததற்கும் என்ன தொடர்பு? மேலும், காய்கறிகளை நறுக்கி முடித்த பிறகு, கத்திக்கு அவசியமில்லையே! எதற்காக அம்மையார் கத்தி கேட்டார் என்று இன்னும் குழப்பம். அதை அம்மையாரிடமே கேட்டு விட்டார்.
அதற்கு அந்த அம்மையார் அழகாகப் பதிலளித்தார்.
“மகனே! நீ கத்தி எடுத்துத் தரும் விதத்தைச் சோதித்துப் பார்த்தேன். அதில் நீ தேறி விட்டாய். அனுமதித்து விட்டேன்” என்றார் அம்மையார்.
ஆன்மிகத்திற்கு தேவை சாந்தம். ஒருவர் கத்தி கேட்டால் கூரிய பகுதியை நம்மை நோக்கி வைத்துக் கொண்டும், கைப்பிடியை வாங்குபவர் பக்கமும் திருப்பிக் கொடுக்க வேண்டும். கூரிய பகுதி நம்மை காயப்படுத்தினாலும் பரவாயில்லை. அடுத்தவரைக் காயப்படுத்தி விடக்கூடாது. தன்னலத்தை விட, பிறர் நலம் கருதுவதே இந்து சமயத்தின் கொள்கை. எனவே, இந்து சமயம் பற்றிப் பேச தகுதியான நபர் என முடிவெடுத்திருந்தார், சாரதாதேவியார்.
அதற்காகத்தான் இப்படி ஒரு கத்தி பரீட்சையை வைத்தார்.