இந்தியா விடுதலை பெற்ற பின்பு, இந்திய ராணுவத்தின் முதல் ஜெனரலைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடானது.
இந்தியத் தேசத்தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் யாருக்கு அந்தப் பொறுப்பை அளிப்பது என்பது பற்றிக் கலந்து பேசினார்கள்.
தலைமை வகித்த ஜவஹர்லால் நேரு, ''நாம் ஓர் ஆங்கில அதிகாரியையே இந்திய ராணுவத்தின் ஜெனரலாக நியமிக்க வேண்டும். ஏனென்றால், நம் ராணுவத்தை வழி நடத்துவதற்கு நமக்குப் போதிய அனுபவம் இல்லை'' என்றார்.
நேருவே கூறும் போது, அதனை எவ்வாறு மறுப்பது என்ற தயக்கத்தால் அனைவரும் நேரு சொன்னதை ஆதரித்தனர்.
ஆனால், ஒரு ராணுவ அதிகாரி திடீரென்று எழுந்து நின்று, ''சார், நான் ஒன்று கூற வேண்டும்'' என்றார்.
நேரு, ''நல்லது, சொல்லுங்கள்'' என்றார்.
''ஐயா, ஒரு நாட்டைத் தலைமை தாங்கி நடத்துவதிலும் நமக்கு அனுபவம் போதாது அல்லவா? இந்திய நாட்டின் முதல் பிரதம மந்திரியாக, ஓர் ஆங்கிலேயரையே ஏன் நியமிக்கக் கூடாது?'' என்று கேட்டார் துணிவு மிக்க அந்த அதிகாரி.
அந்த அரங்கு முழுவதும் அமைதியானது.
பின் நேரு அமைதியாக, ''நீங்கள் நம் இராணுவத்தின் முதல் ஜெனரலாக ஆவதற்குத் தயாரா?'' என்று கேட்டார்.
அந்தப் பொன்னான வாய்ப்பை ஏற்க மறுத்த அவர், ''ஐயா, நம்மிடையே மிகத் திறமை வாய்ந்த ராணுவ அதிகாரி உள்ளார். என் சீனியர் லெப். ஜெனரல் கரியப்பாவே இந்தப் பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்'' என்றார்.
பிரதம மந்திரிக்கு எதிராகக் குரலுயர்த்திய அந்த ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் நாத்துசிங் ராத்தூர். அவர் இந்திய ராணுவத்தின் முதல் லெப். ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.