அரசனின் தலைமை அமைச்சன் உக்கா. அவன் ஒரு நாள் புத்தரிடம் யாரோ ஒருவரைப்பற்றி கூறினான்.
“புத்தர் பெருமானே, அவன் எவ்வளவு பெரும் செல்வம் உள்ளவனாக இருக்கிறான்! அது நிலையாக இருக்கிறது. ஆச்சரியம்”
புத்தர், “உக்கா, அவனிடம் எவ்வளவு செல்வம் இருக்கும்?” என்று கேட்டார்.
அதற்கு உக்கா, “இலட்சக் கணக்கில் அவனிடம் தங்கமும், வெள்ளியும் இருக்கும், அதை யாரால் சொல்ல முடியும்?” என்றான்.
உடனே புத்தர், “இவை உண்மையான செல்வமா? இந்தச் செல்வத்திற்கு நெருப்பாலும், நீராலும், அரசர்களாலும், திருடர்களாலும், எதிரிகளாலும், வேண்டாத சந்ததியினராலும் ஆபத்துண்டு. ஆனால் இப்படிப்பட்டவர்களால் ஆபத்தில்லாத ஏழு செல்வங்கள் உண்டு. 1. நல்ல நம்பிக்கை, 2. நல்லொழுக்கம், 3. மனசாட்சி, 4. பழிக்கு அஞ்சுதல், 5. நல்ல கல்வி, 6. பெருந்தன்மை, 7. அறிவு ஆகியவைதான் அந்தச் செல்வங்கள்” என்றார்.