ஒரு நாள் இரவு, பெருமழை பெய்து கொண்டிருந்தது. அந்த இரவில் புத்தர் தங்க இடமில்லாமல் ஓர் இடையனின் குடிசையின் சுவரோரமாக ஒதுங்கி நின்றார். காற்றும் குளிரும் பலமாக வீசி அடித்தன.
குடிசைக்குள்ளிருந்த இடையன் புத்தரைப் பார்த்தான். ஆனால் அவன் அவரை உள்ளே அழைக்கவுமில்லை. அவரது துன்பத்தைப் பொருட்படுத்தவுமில்லை.
அவன் புத்தரை ஒரு சாதாரண பிச்சைக்காரன் அல்லது சாதாரண துறவி என்று நினைத்து, 'அவர் குடிசைக்கு வெளியிலேயே இருக்கட்டும்' என்று அலட்சியமாக இருந்தான்.
சிறிது நேரத்தில் இடையன் பாட ஆரம்பித்தான்:
“என் மாடுகள் வீட்டுக்குத் திரும்பிவிட்டன, தீ நன்றாக எரிகிறது, என் மனைவி பத்திரமாக இருக்கிறாள், என் பிள்ளைகள் சுகமாகத் தூங்கு கிறார்கள். ஆதலால் மேகங்களே, நீங்கள் இன்றிரவு வேண்டிய அளவுக்கு மழை பொழியலாம்!”
இடையனின் இந்தப் பாடலுக்குப் புத்தர் பதில் அளிக்கிறார்:
“என் மனம் பாதுகாப்பில் இருக்கிறது. என் புலன்கள் உள்முகமாக ஒடுங்கிவிட்டன, என் இதயம் ஸ்திரமாக உள்ளது. ஆதலால், மேகங்களே, இன்றிரவு விரும்பிய அளவுக்கு நீங்கள் மழை பொழியலாம்”
புத்தரின் இந்தப் பாட்டுக்கு இடையன் எதிர்பாட்டுப் பாடுகிறான்:
"வயல்களில் அறுவடை முடிவடைந்துவிட்டது, வைக்கோல் முழுவதும் களஞ்சியத்தில் அடைக்கப்பட்டுவிட்டது, நதி நிறைந்தோடுகிறது, பாதைகள் நன்றாக உள்ளன. எனவே மேகங்களே, இன்றிரவு நீங்கள் உங்கள் விருப்பம் போல், மழையைப் பொழிந்து தள்ளுங்கள்!” இவ்விதம் பாட்டு தொடர்ந்து சென்றது.
முடிவில் புத்தரின் தியாகமும், ஆழ்ந்த அமைதியும் இடையனைக் கவர்ந்தன. அவன், மழையில் நனைந்தும் மன அமைதி குலையாத புத்தரின் நிலையைப் பார்த்து வியப்படைகிறான். அவனுக்கு புத்தரின் மீது உயர்ந்த மதிப்பு ஏற்படுகிறது.
பின்னர் அந்த இடையன் புத்தரின் சீடராக ஆனான்.