'வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்' என்ற பாடலை கே. பி. சுந்தராம்பாள் பூம்புகார் திரைப்படத்தில் மிக அருமையாகப் பாடினார்.
அந்தப் படத்தில் வரும் கவுந்தி அடிகளாக நடிக்க, அவர்தான் சரியானவர் என்று படத்தின் இயக்குனர் நினைத்தார். கண்ணகி – கோவலனுக்கு வழித்துணையாக வரும் சமணப் பெண் துறவி கவுந்தி அடிகள்.
சுந்தராம்பாள் பழுத்த முருக பக்தை. 'சமணத் துறவியாக எப்படி நடிப்பது?' என்று தயங்கினார். முடிவில் தமிழுக்காக அம்மையார் நடிக்கச் சம்மதித்தார்.
கணவர் மறைந்த பின், நெற்றித் திருநீற்றை மேக் – அப்புக்காகக்கூட அழிக்க மாட்டேன் என அம்மையார் உறுதியாக நின்றார்.
''அம்மா, கவுந்தியடிகள் சமணர், இது பாத்திரத்துக்கு ஒட்டாதே'' என்று கூறினார் வசனகர்த்தா.
பின், ஒருவரின் யோசனையால், பட்டையாக விபூதி அணிந்து கொள்ளாது, திருநீற்றையே ஒற்றையாக இட்டுக் கொண்டு நடித்துக் கொடுத்தார் சுந்தராம்பாள்.
அதில் ஒரு பாடல் வரி இப்படி வந்தது.
'அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது; நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?' என்பது அந்த வரி.
''இறைவனைக் கேலி செய்யும் அந்த வரியைப் பாட மாட்டேன்'' என்று மறுத்துவிட்டார் சுந்தராம்பாள்.
வேறு வழியின்றி அதனை எழுதியவர், 'நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது' என்று பாட்டையே மாற்றினார்.
அதன்பின்பு சுந்தராம்பாள் அந்தப் பாடலைப் பாடினார்.