ஒரு நாள் காலை நேரம்.
ரமணரைச் சுற்றி பக்தர்கள் பலர் அமர்ந்திருந்தார்கள்.
அது சாப்பாட்டு நேரம். எல்லோருக்கும் பசி.
சிலர் சாப்பாட்டு அறைக்குச் சென்று ரமணருக்காகக் காத்திருந்தனர்.
அப்போது ரமணரின் கால்கள் வாதத்தால் வீங்கியிருந்தன. எனவே அவரால் உடனே எழுந்திருக்க முடியாது. காலை நன்றாகத் தேய்த்து, பிடிப்பு நீங்கிய பின்னரே எழுந்திருக்க முடியும்.
மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்து கைத்தடியைப் பிடித்துக் கொண்டு ரமணர் வாசற்படியைக் கடக்கும் போது, கையில் ஒரு மண்குடுவையுடன் பால்காரன் ஒருவன் நிற்பதைப் பார்த்தார்.
உடனே ரமணர் அங்கேயே நின்று அவனை நோக்கி, "யார், சின்னப்பையாவா?” என்றார்.
"ஆமாம், நான்தான் சுவாமி!" என்றான் அவன்.
“எப்படி இருக்கிறாய்? சௌக்கியமா? என்னைப் பார்க்க வந்தாயா? நல்லது. கையில் என்ன பானை? அதில் கூழ் கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார் மகரிஷி.
"ஆம் சுவாமி, சிறிது கூழ்கொண்டு வந்திருக்கிறேன்" என்று வெட்கத்தோடு சொன்னான் அந்த மனிதன்.
"கொடு, சாப்பிடலாம்” என்று சொல்லிக் கொண்டே தடியை வைத்துவிட்டு, இரண்டு கைகளையும் சேர்த்து, பால்காரன் பானையிலிருந்து கூழை ஊற்ற, அதை ரமணர் வாயால் நக்கிக் குடித்தார்.
அந்த மனிதனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
சாப்பாட்டு அறையில் மணி அடித்தாயிற்று. எல்லோரும் பசியோடு ரமணர் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.
ஒருவர் வெளியே வந்து ரமணர் வராததற்குரிய காரணத்தைக் கண்டார்.
அவர் ஆச்சரியத்தோடு ரமணரிடம், "என்ன சாமி! நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். நீங்களோ இந்தக் குடியானவன் காரணமாகத் தாமதிக்கிறீர்களே!” என்றார்.
ரமணர் புன்சிரிப்புடன் அவரை நோக்கி, "நான் இங்கிருப்பது உங்களுக்கு மட்டும்தானா? நான் மலை மீது இருந்த போது என்னைப் பற்றி யார் கவலைப்பட்டீர்கள்? அப்போது மாடு மேய்ப்பவர்கள்தான் என்னைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் கூழை என்னோடு பகிர்ந்து கொண்டனர்” என்றார்.
பின்னர் ரமணர் அந்தப் பால்காரனோடும் மண்குடத்தோடும் உள்ளே சாப்பிடுவதற்குச் சென்றார்.