தீர்த்தராம் கணிதத்தில் எம்.ஏ. இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்திருந்தார்.
கல்லூரிப் பேராசிரியர் பெல் அவரைத் தன் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார்.
தீர்த்தராம் அவரைச் சென்று பார்த்தார்.
பேராசிரியர் பெல், "தீர்த்தராம், நான் தங்கள் பெயரை மாநில அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறேன். திறமையும் தகுதியும் உள்ள இளைஞர்கள் தேவை என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். தங்களுக்குச் சம்மதம் என்றால், அரசில் உயர்பதவி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
அதற்குத் தீர்த்தராம், "ஆசிரியர் அவர்களே, எனக்கு அரசுப் பணி தேவையில்லை. உழைத்துப் பாடுபட்டு நான் கற்ற கல்வியை என் சுயநலத்திற்காக, என் வயிற்றுப் பாட்டுக்காகப் பயன்படுத்த மாட்டேன். ஞானதானமாக என் தேசத்தின் சகோதர சகோதரிகளுக்குத் தாராளமாக வாரி வழங்குவேன்” என்று பதிலளித்தார்.
தீர்த்தராமின் நலம் நாடுபவர் என்ற முறையில் பேராசிரியர், இன்னும் ஒரு தடவை வலியுறுத்திப் பார்த்தார்.
அப்போது தீர்த்தராம் திட்டவட்டமாகக் கூறினார்: ''அன்னிய ஆட்சியாளரின் கீழ் பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. காசு பணம் சம்பாதிப்பது, 'எஸ் ஸார்' போட்டுக்கொண்டு குமாஸ்தாவாகக் காலம் தள்ளுவது - இதெல்லாம் என் தலையில் எழுதியிருக்கவில்லை. நான் ஆங்கிலேயர்களின் கைக்கருவி ஆகமாட்டேன். பரம்பொருளின் கைக்கருவி ஆவதையே விரும்புகிறேன்”
அது சரி, அந்தத் தீர்த்தராம் யார் என்று தெரியுமா?, சுவாமி ராமதீர்த்தர் என்பவர்தான் அவர்.