புகழ் பெற்ற புரட்சி விடுதலை வீரர் ராஷ்பிஹாரி போஸ் அப்போது ஜப்பானில் தங்கியிருந்தார். உறங்கும் போது அவர் தலையைத் தென்மேற்குப் பக்கமாக வைத்தே படுப்பார். அதைப் பார்த்த அவருடைய நெருங்கிய ஜப்பானிய நன்பர்கள், "இப்படிப் படுப்பது இங்கே நல்லதல்ல என்று கருதப்படுகிறது. ஜப்பானில் இதுபோல் யாரும் படுப்பதில்லை" என்று அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.
அதற்கு ராஷ்பிஹாரி பதில் சொன்னார்:
"நண்பர்களே, நான் என் தாய்நாட்டை விட்டு வெளியே வசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். மறுபடியும் அங்கே நான் போக முடியுமா என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் எனது தேசம் இங்கிருந்து கடலுக்கப்பால் தென் மேற்குத் திசையில் இருப்பது உங்களுக்குத் தெரியும். என் தாய்நாட்டின் மடியில் தலைவைத்துப் படுக்க நான் துடிதுடிக்கிறேன். பகல் முழுதும் கடமையை நிறைவேற்ற அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிற நான், இரவில் தலைசாய்க்கும் வேளையில் என் தாய் திருநாடு நோக்கிப் படுத்து என் ஆவலை இதுபோல சிறு அளவிலாவது தீர்த்துக் கொள்கிறேன். என் தேசத்தைப் பற்றி நினைக்கும் இந்த வாய்ப்பை என்னிடமிருந்து பறிக்கப் பார்க்காதீர்கள். இதன் மூலம் எனக்குத் தினமும் புதுத்தெம்பு கிடைக்கிறது.”