ஒரு பெரிய நூலகத்தைப் புதிய கட்டிடத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
நூலகத்தின் நிர்வாகி ‘ஆயிரக்கணக்கான நூல்களைப் பத்திரமாகப் புதிய கட்டிடத்திற்கு எப்படி மாற்றுவது? அதற்கு மிகவும் செலவாகுமே’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
நூலகத்தை இரண்டு மாதங்களுக்காவது மூடினால்தான் இடம் மாற்றும் பணியைச் சரியாகச் செய்ய முடியும் என நினைத்த அவர் தன் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
பலரும் பயனற்ற யோசனைகளையே கூறினர்.
முடிவில் ஒரு கடைநிலை ஊழியர், ‘‘சார், நம் நூலக உறுப்பினர்களுக்கெல்லாம், ‘ஒவ்வொருவருக்கும் இரு புத்தகங்களுக்குப் பதிலாகப் பத்து புத்தகங்கள் வழங்கப்படும். படிப்பதற்கான காலமும் ஒரு மாதத்திற்குப் பதிலாக நான்கு மாதங்கள் அனுமதிக்கப்படும். நூல்களைப் புதிய கட்டிடத்தில்தான் அவர்கள் திருப்பித் தர வேண்டும்’ என்று கடிதம் போடுங்கள்’’ என்றார்.
அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு செலவில்லாமல் நூலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. உறுப்பினர்களின் நல்லாதரவையும் பெற்றது.