ஓர் இளைஞர் தந்தையுடன் கடை வீதிக்குச் சென்றார். அங்கே கண்ட காட்சி அவர் உள்ளத்தை உலுக்கியது.
சிலர் ஆடு, மாடுகளைப் போல நீக்ரோக்களை ஆங்கிலேயர்களுக்கு விலை பேசி விற்றுக் கொண்டிருந்தனர்.
மனிதரைச் சந்தைப் பொருளாக்கிய கொடுமையைக் கண்டு மனம் பதைபதைத்தார் அந்த இளைஞர்.
அப்பொழுது அவருடைய தந்தையிடம், ''எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கட்டாயம் இதனை ஒழித்துக் காட்டுவேன்'' என்றார்.
''அப்படியானால் நீ இந்த நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும். ஜனாதிபதியால் மட்டும்தான் இதனை ஒழிக்க முடியும்'' என்றார் அப்பா.
''சரியப்பா, நான் இந்த நாட்டு ஜனாதிபதியாகி, அடிமை வியாபாரத்தை அடியோடு அழித்து விடுகிறேன். இதுவே என் வாழ்வின் உயிர் மூச்சு'' என்றார் இளைஞர்.
அவர் வாயளவில் சொல்லவில்லை; தீர்க்கமான முடிவுடன்தான் சொன்னார். அதற்காகச் செயல்பட ஆரம்பித்தார்.
தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துக் கொண்டே இருந்தார்.
ஆனாலும் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஆண்டுகள் பல ஓடின.
இறுதியில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஜனாதிபதி ஆனார். அவர் பதவி ஏற்றதும் இளமையில் முடிவு செய்தபடி அடிமை முறையைச் சட்டத்தின் மூலம் அகற்றினார்.
இந்த அருமையான செயலுக்காகவே தன் உயிரையும் கொடுத்தார். அவர்தான் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன். இவரால் மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது?
ஒரே முடிவில் நிலைத்து நின்றார். தொடர்ந்து செயல்பட்டார். வெற்றி பெற்றார்.