மகாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு கவிஞராக வளர்ந்து வந்த நேரம்.
அவரது பெருமையையும், புலமையையும் கேள்விப்பட்டு, எட்டயபுரம் மகாராஜா அவருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மான்யமாக வழங்க முன்வந்தார்.
அதன்படி பாரதியாரும் அந்தத் தொகையைப் பெற்று வந்தார்.
இதில் வேடிக்கை என்னவெனில், இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை.
ஒருமுறை பாரதியார், மகாராஜாவின் வீட்டுக்குச் சென்றார். என்ன காரணமோ, பாரதியாரின் முறுக்கு மீசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை ராஜாவான தனக்கே அப்படிப்பட்ட மீசை இல்லையே என்று பொறாமைப்பட்டாரோ?
பாரதியாரைப் பார்த்து ராஜா சொன்னார்: "இது என்ன? இந்த மாதிரி மீசை எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் அதை எடுத்துவிட்டு வாருங்கள். அதை எடுத்தால்தான் இனிமேல் மான்யம் தரப்படும்.''
உடனே பாரதியார் மிகுந்த கோபத்துடன், "மீசையை எடுக்கவா? நீங்கள் மான்யம் தருவது எனக்காகவா அல்லது என் மீசைக்காகவா? மீசையை எடுத்தால்தான் மான்யம் என்றால், அப்பேற்பட்ட மான்யம் எனக்குத் தேவையேயில்லை. எங்கள் குலம் வீரகுலம்! அந்த வீரத்தின் அடையாளம்தான் இந்த முறுக்கு மீசை!'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.
அவரது துணிச்சலையும், வறுமைக்குத் தலை வணங்காத வீரத்தையும் கண்டு அந்த மகாராஜாவே அசந்து போனார்; மான்யம் தொடர்ந்து வழங்கினார்.