ஓர் ஆன்மிக குரு வெளிநாடு செல்வதற்காக விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது பணிப்பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக மதுபானத்தைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தார்.
அவர் குருவிடம் வந்து ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். குரு வாங்கவில்லை.
பணிப்பெண், ''ஐயா, எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.
மதகுரு, ''அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம்'' என்றார்.
அவள் விடவில்லை. ''உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள்'' என்றார். அப்போதும் மதகுரு ஏற்கவில்லை.
''இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன்''
அதற்கு அந்த குரு, ''அம்மா, நான் ஒரு துறவி. மதுவைப் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்'' என்றார்.
அவள் பதறியபடி கூறினார்: ''ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்? இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகி இத்தனை உயிர்கள் பறிபோகுமே?''
குரு அமைதியாகச் சொன்னார்: ''சகோதரி, வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களைச் செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும்''