ஒரு ஜென் குரு. அவரைத் தேடி ஒருவன் வந்தான். எனக்குக் கற்றுக்கொடுங்கள்" என்றான்.
சரி, இங்கேயே இரு. கற்றுத் தருகிறேன்" என்றார். அவன் அங்கேயே இருந்தான். ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம் ஆயிற்று... இப்படி நேரம் ஓடிக்கொண்டே இருந்தது...
பலர் தொடர்ந்து அங்கு வந்துகொண்டிருந்தார்கள்.
அப்படி வருகிறவர்கள் எல்லோரிடமும் குரு ஏதோ பேசிக்கொண்டுதான் இருந்தார்.
வருகிறவர்கள் தங்கள் பிரச்னைகளைச் சொன்னார்கள். இவர் தகுந்த தீர்வுகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
இவன் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையை இழந்தான். ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து நின்றான்.
கொஞ்சம் என்னைப் பாருங்கள். நான் எவ்வளவு நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்றீர்கள். ஆனால் தாங்கள் எதையுமே கற்றுக்கொடுக்கவில்லையே...!" என்றான்.
குரு சிரித்துக்கொண்டே கூறினார்:
தம்பி! நான் இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தேன் என நினைக்கிறாய்? பலர் வந்தார்கள். என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். அதற்கெல்லாம் பதில் கூறினேன். அதில் போதனை உள்ளது..."
இவன் குழம்பிப் போனான். அவர் சொன்னார்:
போதனை நான் சொன்ன பதிலில் இல்லை. நான் பதில் சொன்ன விதத்தில் இருக்கிறது. யார் யாருக்கு எப்படி பதில் சொன்னேன் என்பதை நீ கவனித்திருக்க வேண்டும்.
சில பேர் என்னிடம் வந்தார்கள். எதுவும் கேட்கவில்லை. மௌனமாக என் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். நானும் மௌனமாக இருந்தேன். அதில் உனக்குப் போதனை இருக்கிறது. மூன்று மணி நேரமாக உனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் நீதான் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டாய்!" என்றார்.