தாய் ஒருத்தி, தன் மகன் தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது என்ற வருத்தத்தில் இருந்தாள், 'எப்போது இவன் அதிக மதிப்பெண்கள் பெறும் சிறந்த மாணவனாக உயரப் போகிறான்?' என்பது அவளது கவலை.
அவள் ஒரு நாள் மகான் ஒருவரிடம் சென்று தன் மகனின் நிலையைக் கூறினாள்:
"சுவாமி! என் மகன் அறிவாளி. ஆனாலும் 70 மதிப்பெண்களைத் தாண்ட மறுக்கிறான். புத்தி சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.
"அவனை அறிவாளி என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?" என்று மகான் கேட்டார்.
"அவன் என் மகன் ஆயிற்றே? நான் கல்லூரி மாணவியாக இருந்த போது அனைத்துப் பாடங்களிலும் அதிகமாக மார்க் எடுத்தவள்”
இந்த உரையாடலுக்குப் பிறகு, அவள் தன் மகனை அந்த மகானிடம் அனுப்பி வைத்தாள்.
மகன், நனைந்த பூனைக்குட்டியைப் போல் மகானின் முன்பு வந்து நின்றான்.
"என்ன விஷயம் தம்பி?”
“தெரியவில்லை. அம்மா, உங்களைப் பார்த்து வரச்சொல்லி என்னை அனுப்பினார்கள்...!”
"உன்னைப் பார்த்தால் ஆர்வமும் ஊக்கமும் பொங்கிப் பெருகுபவனாகத் தெரியவில்லையே! 70 மதிப்பெண்கள் தான் உன் குறிக்கோள் என்று அம்மா சொல்கிறார்களே?"
"ஆம். என்னால் வாங்க முடிந்தது அவ்வளவுதான். சில சமயம் இன்னும் மோசமாக...."
"நீ கெட்டிக்கார மாணவன்தான் என்று நினைக்கிறாயா?"
"அம்மா என்னைப் பற்றி அப்படித்தான் நினைக்கிறார்கள். எனக்குத் தெரியாது. நன்றாகவே படிக்கிறேன், ஒவ்வொரு பாடத்தையும் ஒரு தடவைக்கு மூன்று தடவை. ஆனால் பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கும் போது எனக்கு எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. பரீட்சையிலும் வியர்த்துக்கொட்டி உட்கார்ந்திருக்கிறேன். பதில்கள் தெரியவில்லை"
சிறுவனின் தாழ்வு மனப்பான்மையையும், எதிர்மறைச் சிந்தனைகளையும் எப்படி விரட்டுவது என்று மகான் சிந்தித்தார்.
ஒரு யோசனை சொன்னார்:
"படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு சற்று நிதானி. இறைவனிடம் இவ்விதம் பிரார்த்தனை செய்: பகவானே, நான் நல்ல மூளை உள்ளவன் என்பதை அறிவேன். நல்லபடி படித்து முன்னேறுவேன். அதற்கு அருள் புரியும்படி தங்களிடம் பிரார்த்திக்கிறேன்.
"சற்று ஓய்ந்திரு. புத்தகத்தைப் பிரி. சிரமமில்லாமல் படி. கதைப் புத்தகம் படிப்பதாக நினை. ஒரு தடவைக்கு மேல் நீ விரும்பினால் அன்றிப் படிக்காதே. முதல் வாசிப்பிலேயே பாடம் உன் மனதில் பதிந்துவிட்டதாக நம்பு. படித்தப் பாடம் மனதில் கரைந்து நன்றாகப் பதிவதாக உணர். மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போது மனதில் இவ்விதம் சொல்லிக்கொள்: 'புத்திசாலியான அம்மாவை நான் பெற்றிருக்கிறேன். இனிமேல் அம்மாவின் மனம் மகிழும்படி அதிக மதிப்பெண்கள் பெறுவேன். அம்மாவின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி’
"வகுப்பறையில் ஆசிரியர் உன்னை அழைத்ததும், பதில் சொல்வதற்கு முன்பு விரைவாக இறைவனிடம் ஒரு பிரார்த்தனை செய். கடவுள் உன் மனதில் தக்க பதிலைத் தோற்றுவிப்பார் என்று நம்பு. தேர்விலும் கடவுளை நினை. தக்க பதில்கள் உன் மனதில் தோன்றும் என்றும் நம்பு"
மகானின் ஆலோசனைகளைத் தவறாமல் பின்பற்றிய அந்த மாணவன் அடுத்தத் தேர்வில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவன், 'தன்னால் முடியும்' என்று நம்பினான்; 'தோல்வித் தத்துவங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்றான்; முன்னேறினான்.