ஓர் அந்தணன் ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கினான்.
ஒரு பசு அந்தத் தோட்டத்தில் புகுந்து பல செடிகளை அழித்து விட்டது.
அதனால் கோபம் அடைந்த அவன் பசுவை ஓங்கி அடித்தான்.
அதனைத் தொடர்ந்து, பசுவைக் கொன்ற பாவம் அந்தணனுக்கு வந்துவிட்டது.
ஆனால், அவனோ, "பசுவைக் கொன்றதற்குத் நான் பொறுப்பாளியல்ல!'' என்று சொல்லி மறுத்தான்.
''பசுவை ஓங்கி அடித்த என் கையை இயக்கிய சக்தி இந்திரனைச் சார்ந்தது" என்று கூறிய அவன், ''பசுவைக் கொன்ற பாவமும் இந்திரனுக்கே உரியது'' என்று கூறி விட்டான்.
இந்திரனை அந்தப் பாவம் வந்தடைந்ததும் அவன் திடுக்கிட்டான்.
ஒரு வயதான பிராமணரின் உருவத்தை எடுத்துக் கொண்டு, அவன் அந்தணனின் தோட்டத்துக்குச் சென்றான்.
இந்திரன் அந்தணனிடம் தோட்டத்தின் அழகைப் பலவாறாகப் புகழ்ந்து, "இவ்வளவு அழகான ஒரு தோட்டத்தை நான் இது வரையில் எங்கும் பார்த்ததே இல்லை. இதை உருவாக்கியது யார்?'' என்று கேட்டான்.
அந்தப் புகழ்ச்சிகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அந்தணன், ''நான் தான் இந்தத் தோட்டத்தை உருவாக்கினேன், சுவாமி!'' என்று பெருமையுடன் கூறினான்.
மாறுவேடத்தில் இருந்த இந்திரனை அவன், தோட்டத்தின் உள்ளே வந்து மேலும் அழகான காட்சிகளைப் பார்க்கும்படியும் அழைத்தான்.
தோட்டத்திற்குள்ளே வந்த இந்திரன் ஒவ்வொரு புதுமையான காட்சியைக் கண்ட போதும், ''இதனை உருவாக்கியது யார்?'' என்று கேட்டுக்கொண்டே வந்தான்.
அந்தணனும் பெருமையுடன், ''அது என்னுடைய சாதனைதான்'' என்று சொல்லிக் கொண்டே வந்தான்.
கடைசியில் அவர்கள் இருவரும் பசு இறந்த கிடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
அதைப் பார்த்ததும் திடுக்கிட்டவனைப் போல இந்திரன், “இந்தப் பசுவை கொன்றது யார்?'' என்று கேட்டான்.
அப்போது தனது குற்றத்தை உணர்ந்த அந்தணன் வாயை மூடிக்கொண்டு தலை குனிந்தபடி நின்றான்.
இதைப் போலத்தான் நாமும் நல்லது எது நேர்ந்தாலும் அதை நம்முடைய சாதனையாகவே கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அப்படி அல்லாமல் நாம் செய்திருக்கக் கூடாத செயல்களுக்குப் பொறுப்பை ஏற்க மறுத்து நழுவி விடுகிறோம்!