அந்த நாட்டில் அரசனைத் தேர்ந்தெடுப்பது தெய்வத்தின் செயலாக இருந்ததாம்.
ஒரு விசித்திரமான பறவை இருந்தது. அதற்கு 'சந்தோஷப் பறவை' என்று பெயர்.
ஏற்கனவே இருக்கும் அரசன் இறந்து போனால், உடனே அந்தப் பறவை வானவெளியிலிருந்து பறந்து வருமாம். அப்படி அது பறந்து வந்து யார் தலையில் முதலில் உட்காருகிறதோ, அவன் தான் அந்த நாட்டுக்கு ராஜா!
இது அங்கே வழக்கம்.
ஒரு சமயம் அந்த நாட்டின் ராஜா இறந்து போனார். எல்லோரும் ஆகாயத்தைப் பார்த்தார்கள். சந்தோஷப் பறவை பறந்து வந்தது.
'யார் தலையில் அது உட்காரப் போகிறதோ!' என்று அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பறவை நேராகப் பறந்து வந்து, அங்கே நின்று கொண்டிருந்த ஓர் அடிமையின் தலையில் போய் உட்கார்ந்தது.
அந்த அடிமை எந்தக் கோலத்தில் இருந்தான் தெரியுமா?
தோளில் மத்தளம், இடுப்பில் ஆட்டுத் தோல் உடை, தலையில் இறகுகள் வைத்த தொப்பி!
வீடுகளில் ஏதாவது விசேஷம் என்றால் ஆடிப் பாடுபவன் அவன்.
யாராக இருந்தால் என்ன? சந்தோஷப் பறவை உட்கார்ந்தால், உட்கார்ந்ததுதானே! அந்த அடிமையை உடனே அந்த நாட்டு மக்கள் அரசனாக ஏற்றுக் கொண்டார்கள்.
அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரியணையில் உட்கார வைத்தார்கள்.
அந்த அடிமை ராஜா என்ன பண்ணினான் தெரியுமா?
அரண்மனைக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய குடிசை கட்டச் சொன்னான். அந்தக் குடிசைக்குள் தன்னிடம் இருந்த மத்தளம், ஆட்டுத்தோல் உடை, தொப்பி போன்ற எல்லாவற்றையும் பத்திரமாக வைத்தான். அதற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய நிலைக்கண்ணாடியையும் வைத்தான்!
இவன் இப்படிச் செய்ததைப் பார்த்ததும், அங்கிருந்த அமைச்சர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்.
இருந்தாலும் யோசனை செய்தார்கள்.
ஒரு நாட்டுக்கு அரசராக இருப்பவர் இப்படியெல்லாம் செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்களெல்லாம் சேர்ந்து அரசனிடம் மெதுவாகக் கூறினார்கள்:
"அரசே! நீங்கள் தனியாக இருக்கும் போது கூட உங்களுடைய ராஜகௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்!" என்று ஆலோசனை தெரிவித்தார்கள்.
அதற்கு அந்த அரசன், "அரசனாக ஆவதற்கு முன்பு நான் ஓர் அடிமையாகத்தான் இருந்தேன்! இப்போதும் அடிக்கடி அதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்! அப்போதுதான் உங்களையும், மற்றவர்களையும் விட, நான் உயர்ந்தவன் அல்ல என்பது எனக்கு உறைக்கும்! என் மனதிலும் அகங்காரம் உண்டாகாது!” என்று கூறினான்.