புத்தர் பெருமானின் சீடர்களில் ஒருவர் ஆனந்தன்.
துறவியான அவர் ஒரு சமயம் காட்டுப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார். கடும் வெயில். தாகத்தால் துடித்த அவர் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடினார்.
தலையில் தண்ணீர் குடத்துடன் பெண்மணி ஒருத்தி அவர் எதிரில் வந்தாள்.
"அம்மணி! தாகத்தால் தவிக்கிறேன். தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டார் அவர்.
"ஐயா! நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள்" என்றாள் அவள்.
"அம்மணி, நான் தண்ணீர் தானே கேட்டேன்? உங்கள் சாதியைக் கேட்கவில்லையே!” என்றார் அவர்.
குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அவருக்குக் கொடுத்தாள் அவள்.
அவரும் மகிழ்ச்சியுடன் குடித்தார்.