அரசையும் சுகபோக வாழ்வையும் துறந்தவர் புத்தர். அவர் புத்த சமயம் குறித்துப் பரப்புரை செய்து வந்தார்.
சிலர் புத்தர் பிரானின் போதனைகளை விருப்பத்தோடு ஆதரித்தார்கள். சிலர் அவர் போதித்த கொள்கைகளைத் தீவிரமாகத் தாக்கிப் பேசினர். கொள்கைகளைத் தாக்குவதோடு மட்டும் நில்லாமல், புத்தர் பெருமானைத் திட்டித் தாக்கிப் பேசவும் தொடங்கினர்.
ஒருமுறை ஒருவன் புத்தர் பெருமானை வாயில் வந்தபடி எல்லாம் திட்டிப் பேசினான். நேரில் சென்று சந்தித்து அவரைத் தாக்கிப் பேசினான்.
அவன் திட்டியத் திட்டுக்களையெல்லாம் செவிமடுத்த புத்தர் முதலில் புன்முறுவல் பூத்தார். பிறகு, தம்மைத் திட்டிய மனிதனை நோக்கி, ''நண்பரே! அருகே வாருங்கள்!'' என்று கூப்பிட்டார்.
அவன் அருகே சென்றான்.
''நண்பரே! உட்காருங்கள்'' என்று சொன்னார்.
அவன் உட்கார்ந்தான்.
''நண்பரே! தாங்கள் யாரையாவது பார்க்கச் செல்லும் போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வது உண்டா?'' என்று கேட்டார்.
''ஆம், பழங்கள் எடுத்துச் செல்வேன்'' என்று அவன் பதில் சொன்னான்.
''நீங்கள் கொடுக்கும் பழங்களை, தாங்கள் காணச் சென்றவர் ஏற்க மறுத்தால், பிறகு நீங்கள் அந்தப் பழங்களை என்ன செய்வீர்கள்?'' என்று. கேட்டார் புத்தர்.
"திரும்ப எடுத்துக் கொண்டு வீடு திரும்புவேன்'' என்று பதில் சொன்னான் அவன்.
"அதேபோலத்தான் நீங்கள் திட்டியத் திட்டுக்களை இப்போது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப் போல, தங்களது திட்டுக்களையும் நீங்களே திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார் புத்தர்.
உடனே அந்த மனிதன், தான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கோரினான். அவருடைய திருவடிகளில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான்.
புத்தர் பிரான் மீண்டும் புன்முறுவல் பூத்தார்.