இஸ்லாமியன் ஒருவன் சமயத் துறவி ஒருவரிடம் சென்றான். “ஐயா, நான் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா?" அதில் தவறேதுமில்லையே?” என்று கேட்டான்.
“தாராளமாகச் சாப்பிடலாம்” என்றார் துறவி.
"தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன்.
"குடிக்கலாம்" என்றார் துறவி.
“சிறிது புளிப்புப் பொருள்'' என்று இழுத்தான்.
“தவறேதும் இல்லை. சாப்பிடலாம்” என்றார் துறவி.
"மூன்றும் சாப்பிடலாம் தவறில்லை என்கிறீர்கள். மூன்றும் சேர்ந்ததுதானே போதையூட்டும் பேரீச்ச மது. அதை மட்டும் ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?" என்று துறவியை மடக்கினான் அவன்.
"நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போட்டால்?” என்று கேட்டார் துறவி.
"சிறிதும் கவலைப்படமாட்டேன்” என்றான் அவன்.
“சிறிது நீரைத் தெளித்தால்" என்று மீண்டும் கேட்டார் துறவி. "அப்பொழுதும் கவலைப்படமாட்டேன்'' என்றான் அவன்.
"நான் அந்த மண்ணையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டையும் தீயில் காட்டி உருவாக்கப்பட்ட செங்கல்லை ஓங்கி உன் தலையில் போட்டால் என்ன செய்வாய்?" என்று பதி லுக்கு மடக்கினார் துறவி.
அவன் துறவியிடம் அதற்கு மேல் பேசமுடியாமல் அங்கிருந்து கிளம்பினான்.