அந்த அறிஞர் ஒரு குழந்தைப்பிரியர்; சிறுவனின் 'கொழு, கொழு' கன்னத்தைத் தொட்டுப் பார்க்கும் சுகத்தை விட, அவன் எதிர்காலத்தில் எந்தெந்தச் சாதனைகளின் சிகரங்களைத் தொடுவான் என்பதை அறிவதில் குறியாக இருப்பார்.
அவர் ஒரு நாள் சிறுவன் ஒருவனிடம், ''இங்க வா, இந்தச் சாக்லெட் வேணுமா?'' என்று கேட்க..., சிறுவனது வாயில் ஈரம்.
''ஆனா, ஒரு கண்டிஷன். இந்த சாக்லெட்டை நீ பார்த்துக் கொண்டுதான் இருக்கணும். நான் வெளியே போய்ட்டு வந்தவுடன் நீ சாப்பிடணும். நீ பொறுமையா 10 நிமிடம் எனக்காகக் காத்திருந்தால் இந்த சாக்லெட்டோட இன்னொரு சாக்லெட்டும் தருவேன். சரியா?'' என்றார் அறிஞர்.
சிறுவனது கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றார்.
வெவ்வேறு இடங்களில் இதே போன்ற நிபந்தனை போட்டியைச் சில சிறுவர், சிறுமியர்களுக்கு வைத்தார் அறிஞர். ஒவ்வொரு முறை வெளியில் சென்று வந்த பிறகும், அவருக்கு ஒவ்வொரு பாடம் கிடைத்தது.
'சாக்லெட் மீசை'யோடு, சாக்லெட்டை முழுவதுமாகப் பதம் பார்த்திருந்தான் முதல் சிறுவன்.
ஆசையை அடக்க முடியாமல் சாக்லெட்டைச் சிறியதாக்கி விட்டிருந்தாள் முதல் சிறுமி.
மற்றொருத்தி, அறிஞர் உள்ளே நுழைந்ததும், ''சார், உங்களுக்காகக் காத்திருந்தேன். நான் மறுபடியும் காத்திருக்கணும்னா இன்னொரு சாக்லெட் தாங்க'' என்றாள்.
''அங்கிள், நீங்க வந்திட்டீங்க. இப்போ நாம சேர்ந்து சாப்பிடலாமா...?'' என்று கேட்டான் 6 வயது அருண்.
10 நிமிடம் கழித்து சாக்லெட் சாப்பிட்டால் குணங்களில் இவ்வளவு வித்தியாசங்களா! ஆம் என்கிறார் அந்த மனோதத்துவ நிபுணர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவு நம்மைப் பிரமிப்பூட்டும்.
அதே நான்கு குழந்தைகளையும் அவர்களது 16 முதல் 18 வயது வரை ஆராய்ந்து பார்த்தார் அந்த அறிஞர்.
சாக்லெட்டை உடனே உண்டவனிடம் நம்பகத்தன்மை குறைவாக இருந்தது. இன்று என்ன வேண்டுமோ அதை மட்டுமே அவன் கவனித்தான். எதிர்காலம் பற்றி முடிவெடுக்க முடியாதவனாக இருந்தான். பொறாமை கொண்டவனாகவும், மந்தமானவனாகவும் வளர்ந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக, சாக்லெட்டைச் சாப்பிட்டவள், எப்போதும் சஞ்சலமானவளாகவே இருந்ததையும் அறிஞர் கண்டார்.
சாக்லெட்டை உண்டுவிட்டு அடுத்ததைக் கேட்டவள், ஒரு வேளை தரமற்ற அரசியல்வாதியாகி, சமுதாய வியாதியாகிவிடுவாள் என்று தோன்றியது.
இதற்கு மாறாக, பொறுமையாகக் காத்திருந்தவன் படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான்; மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருந்தான்; தன்னம்பிக்கையுடன் லட்சியம் கொண்டவனாகச் சிறந்து விளங்கினான்.