பெரியவரிடம் மற்றொரு விதவைப் பெண்மணி ஆலோசனை பெற வந்தாள்.
அவளுக்கு நான்கு குழந்தைகள். கணவன் ஒரு சிறிய ரொட்டிக்கடை வைத்திருந்தான். மூன்று மாதங்கள் நோயால் அவதிப்பட்டு இறந்துவிட்டான். மிக அதிக அளவில் மருத்துவச் செலவு.
கணவன் விட்டுச் சென்ற கடையை மனைவி தொடர்ந்து நடத்த நினைத்த போது மற்றொரு பேரிடி. பெரிய ஒரு வியாபார நிறுவனம் இவள் இருந்த பகுதியில் பிரம்மாண்டமான, அழகிய, நவீனக் கட்டிடங்கள் கட்டி தனது மிகப்பெரிய பிஸ்கட் கடையைக் கண்ணைப் பறிக்கும் ஆடம்பர வண்ண விளக்குகளுடன் ஆரம்பித்தது.
அவளுடைய எல்லா வாடிக்கையாளர்களும் புதிய கடைக்குப் போக ஆரம்பித்து விட்டார்கள். அவளது கடைக்கு யாரும் வரவில்லை. வியாபாரம் படுத்துவிட்டது.
அவள் தன் கடையை இழுத்து மூடிவிட வேண்டியதுதானா? பிழைப்பதற்கு என்ன வழி?
முதியவர் சிந்தித்தார்.
“உன் உச்சரிப்பைப் பார்த்தால் நீ ஸ்காட்லாந்துக்காரி என்று தோன்றுகிறது… 'உலகில் கேக் தயாரிப்பதில் ஸ்காட்லாந்துக்காரர்களுக்கு இணை எவருமில்லை' என்பார்கள். நீ வித்தியாசமான, தரமான, சுவையான கேக்குகள் தயார் செய்து பாரேன்...!
“இது போன்ற சுவையான கேக்குகளை நீங்கள் இதுவரையில் ருசி பார்த்தே இருக்க மாட்டீர்கள். அற்புதம்! வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சரக்குகள் தீர்வதற்கு முன்பே விரைந்து வாங்குங்கள். அமுதும், தேனும் இதன் சுவையோடு போட்டியிடவே முடியாது!” என்றும் முதியவர் விளம்பரங்கள் கொடுக்கச் செய்தார்.
அவ்வளவுதான்! கடையில் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறும் நிலை. கேக்கின் மகிமை உள்ளூரையும் தாண்டி வெளியூர், வெளிநாடு என்று பரந்து, விமானங்களில் கூட சரக்குகள் அனுப்ப நேர்ந்தது.
இந்த உலகம் போட்டி மயமானது. இதில் நாம் வெற்றி பெற தனித்திறமை வித்தியாசமான, தரமான உழைப்பை நாம் காண்பிக்க வேண்டும்.
'நம்மால் என்ன செய்ய முடியும்?' என தளர்ந்து பின்வாங்கிவிடக் கூடாது.
புதிய உற்சாகத்துடன் தெளிவாகச் சிந்திப்பவர்களுக்கு வெற்றிப் பாதை நிச்சயம் தென்படும்.