சங்க காலத்தில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற சோழ அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கும் மலையமான் என்ற சிற்றரசனுக்கும் பகைமை இருந்து வந்தது.
கிள்ளியோ பெருநிலப்பரப்பை ஆண்டவன். மலையமானோ குறுநில மன்னன். இருவர் நாடுகளும் அருகருகே அமைந்திருந்தன. இடையிலோ பெருங்காடு.
மலையமானுக்கு இரண்டு பிள்ளைகள். அந்த இரண்டு சிறுவர்களுக்கும் காட்டு விலங்குகளைக் காண ஆசை.
மன்னனின் ஆணைப்படி, இரண்டு சிறுவர்களையும் தேரில் ஏற்றிச் சென்று காட்டின் ஒரு பக்கத்தில் இறக்கிவிட்டான் தேர்ப்பாகன்.
சிறுவர் இருவரும் அந்தக் காட்டின் இயற்கை அழகைச் சுவைத்தபடி நெடுந்தொலைவு சென்றுவிட்டனர்.
அவர்கள் இப்போது தாய்நாட்டின் எல்லையைக் கடந்து சோழன் நாட்டுக் கானகத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது காட்டைக் காவல் செய்து கொண்டிருந்த கிள்ளிவளவனின் வீரர்கள் சிறுவர்களைப் பிடித்துக் கொண்டு போய் வேந்தன் முன்பு நிறுத்தினர்.
சிறுவர்கள் பகையரசனின் பிள்ளைகள் என்பதை அறிந்த சோழன், அனுமதியின்றித் தனது நாட்டுக்குள் நுழைந்ததைக் காரணம் காட்டி, அவர்களை யானைக்காலில் இட்டுக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கினான்.
இன்னும் சிறிதுபொழுதில் சோழனும் அரசவையினரும் காண அந்த அரும்புகள் அழியப் போகின்றன,
இதில் சோகம் என்னவென்றால், ஆரம்பத்தில் புதிய இடம், புதிய மனிதர்கள் என்று அழுது கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் முன்பு நிற்கும் களிற்றைப் பார்த்ததும் சிரிக்க ஆரம்பித்தனர்.
அப்போது அங்கு கோவூர்க்கிழார் என்ற புலவர் விரைந்து வந்தார். அவர் அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்; அறவுணர்வு மிகுந்த பெரியவர்; அந்தப் புலவர் நடந்தவற்றை அறிந்து கொண்டபின் இத்தண்டனை மிகக் கொடியது என்பதை உணர்ந்தார்.
அதனால் புலவர், சோழனிடம், ‘‘வேந்தே! நீயோ ஒரு புறாவுக்காகத் தன்னையே தந்த சிபிச்சோழன் மரபில் வந்தவன். இச்சிறுவர்களோ, புலவர்கள் பசித்து வந்தால் அவர்களுக்குத் தன்னிடம் உள்ளதை இல்லை என்னாது பங்கிட்டு உண்ணும் கருணை மரபில் வந்த மலையமான் பிள்ளைகள். தங்களைக் கொல்லத்தான் இந்தக் களிறு வந்திருக்கிறது என்பதையும் அறியாமல் வேடிக்கை பார்க்கும் விவரம் அறியாத சிறுவர்கள் இவர்கள். அரசே! என் மனதில் பட்டதை உனக்குச் சொல்வது என் கடமை, அதனால் கூறிவிட்டேன். இவற்றை நீயும் கேட்டுக் கொண்டுவிட்டாய், நீ எதைச் செய்ய விரும்புகின்றாயோ, அதைச் செய்க.’’ என்று சொன்னார்.
அப்பனிடம் கொண்ட பகைக்குப் பிள்ளைகளைப் பழிவாங்குவது அறமல்ல என்பதை அரசன் உணர்ந்தான். தன் தவற்றை எண்ணிய கிள்ளிவளவன் சிறுவர் இருவரையும் விடுவித்துச் சோழமரபின் பெருமையைக் காப்பாற்றினான்.
பெரியவர்கள் தம் அனுபவத்தால் கூறும் அறிவுரைகளை நாம் தட்டக் கூடாது.