மெக்சிகோ நாட்டில் மிகப் பிரபலமான வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் இறக்கும் தருவாயில் தன் மூன்று மகன்களை அழைத்து, அவர்களிடம், "என் மகன்களே.. என்னுடைய காலம் முடியப் போகிறது. நான் நம்பிக்கையான நண்பனாக, உண்மையான வியாபாரியாக, மிகச் சிறந்த வீரனாக வாழ முயற்சி செய்து, அப்படியே வாழ்ந்தும் காட்டினேன். உங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தேன். எனக்கு எதிரிகள் உண்டு என்றால் அது என்னைக் கண்டு பொறாமைப்படுவதன் காரணமாக மட்டுமே ஏற்பட்டிருக்கும். என்னுடைய அறிவுரைகளைத் தவிர, உங்கள் மூவருக்கும் நான் மூன்று சிறந்தப் பொருள்களை விட்டுச் செல்கிறேன். அதைச் சரியாக உபயோகப்படுத்தினால், நீங்கள் அதிகமாகச் சம்பாதிக்கலாம். குறி தப்பாது தாக்கும் வில், எங்கு நினைக்கிறோமோ அங்கே தன் எசமானனை அழைத்துச் செல்லும் மான், கண்டதைப் பளிச்செனக் கூறும் பறவை. பத்திரமாக உபயோகித்து முன்னேறுங்கள்" என்று கூறினார். இவை மூன்றையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு இறந்தும் போனார்.
மூத்த மகன் ஜான், நான் மூத்தவன் என்பதால், சொத்தில் முதல் முடிவு என்னுடையதே. அதனால் நான் வில்லை எடுத்துக் கொள்கிறேன்" என்று தனக்கு வேண்டியதை முதலில் எடுத்துக் கொண்டான்.
"இந்த வில்லை வைத்துக் கொண்டு நான் அரிய பறவைகளையும் விலங்குகளையும் கொன்று அதன் இறகுகளையும் தோல்களையும் விற்று பெரிய வியாபாரி ஆவேன்" என்ற எண்ணம் கொண்டான்.
இரண்டாமவன் ரான், "என்னை விரும்பிய இடத்திற்குக் கொண்டு செல்லும் மானை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று அவன் தனக்கு பிடித்ததை எடுத்துக் கொண்டான்.
அதனால் இளையவன் டேன் கடைசியாக இருந்த பறவையை எடுத்துக் கொண்டான்.
"இதை நான் அன்பாக வளர்ப்பேன். இந்தப் பறவையால் பெரிய உபயோகம் எதுவும் இல்லையென்றாலும், இது என் தந்தை கொடுத்ததால், இதைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். இதற்கு நல்ல நண்பனாகவும் இருப்பேன்" என்று எண்ணினான்.
மூவரும் தங்கள் திறமையைக் காட்டி வாழ வெளி உலகம் காண புறப்பட்டனர்.
பல வருடங்களுக்குப் பின், இரண்டு மூத்தச் சகோதரர்கள் ஜானும் ரானும் போதிய அளவு செல்வம் சேர்த்திருந்தனர். செல்வந்தனாக ஆகாவிட்டாலும், இளையவன் மிகச் சிறந்த யாவரும் மதிக்கத்தக்க மனிதனாக மாறியிருப்பதைக் கேள்விப்பட்டனர். இளையவன் டேன் அரசனுக்குப் பிரதான மந்திரியாக இருந்தான். அவனுடைய அறிவுரைகள், எச்சரிக்கைகள், எண்ணங்கள் அனைத்தும் அரசரால் மதித்து கேட்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை அனைத்தும் உண்மையாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தன.
மூத்தவர்கள் இருவரும் இதைக் கேள்விப்பட்டு, மிகுந்த பொறாமை கொண்டனர்.
ஒரு சமயம், ஜான் ரானிடம், "எப்படி டேனால் பிரதான மந்திரியாக முடிந்தது?" என்று கேட்டான்.
உடனே ரான் "இது தந்தை கொடுத்த பறவையால் கூட இருக்கலாம்" என்று பதிலளித்தான்.
ஜான், "நாம் ஏன் மந்திரியாக ஆகக் கூடாது?" என்ற தன் விருப்பதை எழுப்பினான்.
ரான், "ஆகலாம் தான்.. ஆனால் தம்பி இருக்கும் போது, அது எப்படிச் சாத்தியம்?" என்ற ஐயத்தை எழுப்பினான்.
முடிவில் இருவரும் பேசி, டேனைக் கொன்று, பறவையைத் திருடி, அவனுடைய பதவியை அடைய எண்ணினர்.
அவர்கள் தம்பி டேன் பிரதான மந்திரியாக மாறியது அந்தப் பறவையால் தான் என்று பெரிதும் நம்பியதால், இந்தத் தவறான முடிவை எடுத்தனர்.
அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டு இருந்ததை, அவர்கள் அமர்ந்திருந்த மரத்தின் கிளையில் இருந்த பறவை கேட்க நேரிட்டது. கேட்டச் செய்தியைப் பறவை உடனே சென்று டேனிடம் கூறியது. அவனுக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. கண்களில் கண்ணீர் கசிந்தது.
"அண்ணன்மார்களை அன்புடன் காண வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், இதென்ன இக்கட்டான சூழல். நான் அவர்களைக் கண்டு பயப்படவில்லை. என்னை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவர்கள் மனதால் என்றும் கெட்டவர்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். காலப்போக்கில் அது சரியாகிவிடும். என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கலாமே.." என்ற எண்ணத்துடன் சகோதரர்களைக் காண ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் சகோதரர்கள் இருவரும் டேனைக் காணச் சென்றனர். டேனின் நிலையைக் கண்டு அவனைப் பாராட்டிப் பேசினர். அவர்களை அன்புடனும் கண்ணீருடனும் வரவேற்று, தன் வீட்டின் மிகச் சிறந்த அறையில் தங்க வைத்தான். அரசருக்கும் அறிமுகப்படுத்தினான்.
சகோதரர்கள் இருவரும் அன்று மிக விரைவிலேயே உறங்கச் சென்றனர். மூத்தவன் ஜான் மிகவும் அதிக தூரம் நடந்ததால் சோர்ந்து போயிருந்தான். ரானுக்கு மிக வேகமாக மான் ஓடிய போது கிளப்பிய தூசியினால் தொண்டையில் வலி ஏற்பட்டு, அதனால் சோர்வுற்றிருந்தான்.
சிறிய பறவை கூறும் செய்திகளை ஒவ்வொரு நாளைப் போலவே, அன்றும் கேட்பதற்காக டேன் காத்துக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த பறவை, அவனது தோளில் அமர்ந்து, மிகவும் மெல்லிய குரலில், "நமது அண்டை நாட்டு அரசன், நம்மை எதிர்த்து போர் தொடுக்க முடிவு செய்திருக்கிறான். நாம் எதிர்பார்க்காத போது நம்மைத் தாக்கவும் திட்டமிட்டுள்ளான். அவனது படை நாளை விடியற்காலையில் நம்மைத் தாக்க உள்ளது. அவர்கள் நதியின் பக்கமுள்ள உயரமான மலை மேல் உள்ள வழியாக வர இருக்கிறார்கள்" என்றது.
அந்தச் செய்தியை எசமானனின் காதுகளில் சொல்லி முடித்ததும், மேலும் விவரங்களைச் சேகரிக்க பறந்து போனது.
மந்திரி டேன் இந்தச் செய்தியை அரசனிடம் சென்று கூறினான்.
"அப்படியென்றால் இப்போது என்ன செய்வது? தளபதிகள் இப்போது நாட்டில் இல்லையே! வீரர்கள் அனைவரும் விடுமுறையில் இருக்கிறார்களே! என்ன செய்வது?" என்று ஆலோசித்தார்.
"அரசே.. என்னுடைய சகோதரர்கள் இருவரையும் அரண்மனைப் பிரதானியாக ஆக்கச் சம்மதித்தால், நானும் என் இரு சகோதரர்களும் சேர்ந்து எதிரி எவ்வளவு பலம் மிக்கவனாக இருந்தாலும் தோற்றோடச் செய்கிறோம்" என்றான்.
"சம்மதம்.." என்று சொன்ன அரசருக்கு, நடக்கப் போவது என்ன என்று சற்றும் புரியாமல், நம்பிக்கையிழந்தார். "இந்த மூவரும் எவ்வளவுதான் வீரத்துடன் இருந்தாலும், அவர்களால் மிகப் பெரிய படையை எப்படி வெல்ல முடியும்... நம்மால் இப்போது எதையும் செய்ய முடியாது என்கிற போது.. டேன் என்ன செய்யப் போகிறான் என்பதை பொறுத்திருந்து பார்ப்பது தான் ஒரே வழி" என்று எண்ணினார்.
டேன் உடனே தன் சகோதரர்களைச் சந்தித்துப் பேச எண்ணி, அவர்களை எழுப்பினான்.
"அண்ணா.. நம்முடைய தந்தை தலைச்சிறந்த வீரராகப் பெயர் பெற்றவர். இன்றும் நம் பெயர்களைக் கேட்டால், அந்த மாவீரனின் மகன்களா என்று கேட்கும் அளவிற்கு மக்கள் மனதில் இருக்கிறார். அந்தப் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும். நம்முடைய நாட்டைக் காக்க நாமும் நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும்" என்று கூறியதைச் சகோதரர்கள் வேண்டா வெறுப்பாகக் கேட்டனர்.
பிறகு நடக்கப்போவதைப் பற்றி விவரமாகக் கூறி, தன் திட்டத்தையும் எடுத்துச் சொன்னான்.
பிரதானியாகும் விசயத்தைக் கேட்டதுமே, தம்பியின் திட்டத்தை ஆவலுடன் கேட்க ஆரம்பித்தனர்.
"அண்ணா.. உன்னுடைய மான் நம்மை மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லட்டும். எந்தப் படையும் நம் மானின் வேகத்திற்கு ஈடாக முடியாது. அங்கிருந்து எதிரிகள் இருக்கும் சரியான இடத்திற்கு என் பறவையைக் கேட்டுச் செல்லலாம். பிறகு பெரிய அண்ணா தன் வில்லால் வேண்டிய மட்டும் எதிரிகளைக் கொன்று குவிக்கட்டும்" என்று டேன் திட்டத்தை விளக்கினான்.
மூவரும் மானின் முதுகில் ஏறிக் கொண்டனர். பறவை டேனின் தோளில் அமர்ந்து கொண்டது.
ரான், "மானே.. மானே.. வேகம் வேகம்.." என்று சொல்லி ஒரு நொடிக்குள்ளேயே மலையின் உச்சியை அடைந்தனர். மூவரும் ஒரு புதருக்குப் பின் ஒளிந்து கொண்டனர். பறவை எதிரியின் இடத்தைக் கண்டு பிடிக்கச் சென்றது. மிக விரைவிலேயே அது திரும்பி வந்து, எதிரிகளும் அரசரும் இருக்கும் இடத்தைக் குறிப்பாகச் சொன்னது.
ஜான், சின்னப் பறவைச் சொன்ன இடத்தை நோக்கி அம்பு எய்தான். அம்பு நேரே, வெகு தொலைவு சென்று அரசனின் இதயத்தைத் தைத்தது. படையினர் அனைவரும் பயந்து நின்றனர்.
தளபதிகள், "இது மிகவும் அதிசயமாக அல்லவா இருக்கிறது. எங்கிருந்து இந்த அம்பு வந்தது? அரசருக்கு ஆபத்தல்லவா? நாம் நாடு திரும்பலாம்" என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் ஒரு தளபதி மட்டும், மிகுந்த வீரத்துடன் முன்னே வந்து, "முன்னேறுங்கள்... வீரர்களே.. முன்னேறுங்கள்.. நம் மன்னரைத் தாக்கியவர்களை நாம் வஞ்சம் தீர்க்க வேண்டும்" என்று உரத்தக் குரலில் வீர முழக்கம் செய்தான். ஜான் அந்தத் தளபதியைக் குறி வைத்து மற்றொரு அம்பை விட்டான். அவன் இறந்தான்.
மற்ற வீரர்க்ள் அனைவரும் நடப்பது ஒன்றும் புரியாமல் பயம்கொண்டு தங்கள் நாட்டை நோக்கி ஓடலானார்கள். நடந்தும் குதிரையிலும் வந்தவர்கள் ஓடி மறைந்தனர். சூரியன் உதிக்கும் தருணத்தில் அங்கு ஒருவர் கூட இல்லை.
மூன்று சகோதரர்களும் இறந்த அரசரையும் தளபதியையும் தங்கள் முதுகில் வைத்துக் கொண்டு, காலை உணவிற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
மக்கள் அனைவருக்கும் செய்தி சென்று சேர்ந்தது. மக்கள் அவர்கள் மூவரையும் ஆடிப்பாடிக் கொண்டாட, அவர்கள் அரண்மனைக்குச் சென்றனர். அரசர் மூவருக்கும் பற்பல பரிசுகளைத் தந்து, இரு மூத்த சகோதரர்களையும் நாட்டின் பிரதானிகளாக அறிவித்தார்.
மூவரும் அன்றிலிருந்து ஒற்றுமையுடன் வாழ ஆரம்பித்தனர். இளையவன் மூத்தவர்களின் திட்டத்தைக் கேட்டு, ஆத்திரப்படாமல் செயல்பட்டதன் விளைவே இந்த நிலை என்பதை உணர்ந்து கொண்டு அன்புடன் வாழ்வது எத்தனை நல்லது என்பதை உணர்ந்தனர். தனித்தனியே இருப்பதை விடவும் மூவரும் சேர்ந்து இருப்பதன் மகிமையை தெரிந்து கொண்டனர். சகோதரர்களாய் இருப்பதன் நன்மையையும் பயனையும் உணர்ந்து கொண்டனர்.
அன்றிலிருந்து அந்நாட்டில் ஏதாவது ரகசியம் யாருக்காவது தெரிந்தால், அதை "சின்னப் பறவை எனக்குச் சொன்னது" என்று கூற ஆரம்பித்தனர்.