அழகு பெறுவது எப்போது?

கடவுள், உன் மூச்சின் மூச்சாகவும் உயிரின் உயிராகவும் இருக்கிறான் என்பதை அறி!
- கபீர்தாசர்

பயிர்களைச் சுமந்து நிற்கும்போது நிலம் அழகு பெறுகிறது. தாமரையைச் சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது. நாணத்தைச் சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள். அறத்தைச் சுமந்து நிற்கும்போது ஆண் அழகு பெறுகிறான்.
- நான்மணிக்கடிகை

செருப்புக்குள்ளே கல்லும், காதுக்குள்ளே ஈயும், கண்ணுக்குள்ளே தூசியும், காலில் முள்ளும், வீட்டில் கலகமும் எத்தனை அளவில் சிறியதாயினும் அதிகத் துன்பத்தைத் தருவனவாகும்.
- கவி வேமன்னா

வைத்தியனிடம் மருந்து அருந்தாவிடில் பிணி தீராது. விளக்கில்லையேல் இருள் அகலாது. நல்லுபதேசமின்றி அஞ்ஞானமகன்று ஞானம் பெறுவது மிகவும் கடினம்.
- யோகி வேமனா

எல்லாவித பக்தியிலும் சிறந்த பக்தி இறைவனிடம் ஆத்ம நிவேதனம் அல்லது பூரண சரணாகதி அடைவதேயாகும்.
- சமர்த்த ராமதாசர்

பிறருக்குத் துன்பமிழைக்காமல் இருப்பது எளிது. ஆனால் பிறரால் துன்பமிழைக்கப்படும் பொழுது பொறுத்திருப்பது கடினம். அந்தக் கடினமான காரியத்தைப் பெரியோர்களால்தான் செய்ய முடியும்.
- ரிஷிகேஷ் சிவானந்தர்

எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும்.
- சாக்ரடீஸ்

உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.
- மில்டன்

கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக கடவுள் இல்லை.
- டால்ஸ்டாய்

உழைத்து வாழ்வதே நமது குறிக்கோள். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். மற்றவரது உழைப்பால் நாம் மகிழ்ச்சியடையக் கூடாது. பிறரது உழைப்பில் நாம் வாழ்வது திருடுவதற்குச் சமமானது.
- ஜவஹர்லால் நேரு

தனது தவறுகளை உணர்ந்தவன், மற்றவர்களிடம் குற்றம் காணமாட்டான்.
- சாடி

கூரையை மழை இல்லாத போதே செப்பன்னிட்டுக் கொள்ள வேண்டும்.
- கென்னடி

எப்போது அமைதியாக இருக்க வேண்டுமென்று அறிந்தவன்தான் புத்திசாலி.
- யூரிபைட்ஸ்

நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
– மகாவீரர்

சுதந்திரம் என்பது நமக்கு நாமே பொறுப்பு ஏற்கத் தயாராக இருப்பதாகும்.
- நியட்ஷே

நதி கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனிடம் சங்கமமாகிறது.
- கபீர்தாசர்

எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேசவேண்டும்.
- மகாவீரர்

ஒரு தரம் சொன்னால் அறிந்து கொள்ளக்கூடியவனுக்கே உபதேசம் செய்வதில் லாபம் உண்டு.
- பஞ்சதந்திரம்

மனிதனின் சுதந்திரம் மற்றவருக்குக் கஷ்டம் அளிக்காத வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- ஜான் ஸ்டுவாட்மில்

சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபடுபவர்கள், பண்புடன் பணத்தையும் இழந்தே ஆக வேண்டும்.
- செஸ்டர்ஃபீல்ட்

எவனாவது ஒருவன் யாருக்காகவாவது குழி தோண்டுகிறான் என்றால், அவனே அதில் விழுந்துவிடுவான்.
- ஜான் டி.நெட்டோ

மலை போல் குவிந்த தங்கம் சில மனிதர்களின் மனதை மயக்காது; ஆனால் பாராட்டு அவர்களை வீழ்த்திவிடும்.
– பீச்சர்

சுதந்திர மனிதனின் உயர்ந்த உள்ளம், கஷ்டங்களைத் தவிர்ப்பதிலும் வந்த கஷ்டங்களைச் சமாளிப்பதிலும் ஒன்றாகவே உள்ளது.
- ஸ்பிநோஜா

சிலர் பெருந்தன்மையுடன் பிறக்கின்றனர்; சிலர் பெருந்தன்மையை வளர்த்துக்கொள்கின்றனர்; சிலர் மீது பெருந்தன்மை திணிக்கப்படுகிறது.
- ஷேக்ஸ்பியர்

கனவு போன்று நிலையற்ற இந்த உலகத்தை உண்மையானதென்று தவறாக உணர்ந்து, அதில் பெண், பிள்ளை, மனைவி ஆகிய பாசத்தாலும் கட்டுண்டு அனைவரும் பரமனை மறந்து விடுகிறார்கள்.
- யோகி வேமனா

தாராள மனமில்லாதவன் வீட்டில் உணவு கொள்ளாதே. ஏனெனில் அவனளிக்கும் உணவு அத்தனையும் விஷம் போன்றது.
- ரிக் வேதம்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.