1. நெருப்பு சுவாலைகளினால் தகிக்கிறது; சூரியன் கிரணங்களால் தகிக்கிறான்; ராஜா தண்டனையால் தகிக்கிறான்; உத்தம மனிதன் கோபத்தினால் தகிக்கிறான்.
2. ஒரு குலத்திற்காக ஒருவனை விட வேண்டும். ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை விடவேண்டும். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தை விடவேண்டும். தனக்காக (ஆத்மா முக்தி பெற) பூமியையே விடவேண்டும்.
3. பெரியோர் இல்லாதது சபையன்று; தர்மத்தைச் சொல்லாதவர் பெரியோரும் அல்லர்; உண்மை இல்லாதது தர்மமும் அன்று; கபடம் சேர்ந்தது உண்மையும் அன்று.
4. பொன்மயமான மிருகம் இருப்பதில்லை என்றாலும், ராமர் பொன் மானின் மேல் ஆசைப்பட்டார். கஷ்டம் நெருங்கின காலத்தில் புத்தியும் மிகவும் மாறிப்போகிறது.
5. தேவர்கள் எந்த மனிதனுக்குத் தோல்வியைக் கொடுக்கிறார்களோ அவனுடைய புத்தியைக் குறைத்து விடுவார்கள். அவன் விபரீதங்களையே பார்ப்பான், கேடு நெருங்கி மதி கலங்கிப் போனபோது அநியாயம் நியாயம் போலத் தோன்றி மனதை விட்டு விலகாமல் இருக்கும். கேடு வருமுன் தீயவையெல்லாம் நல்லவை போலவும், நல்லவையெல்லாம் தீயவை போலவும் தோன்றும்.
6. புது வருமானம் இல்லாமல் செலவு செய்யப்படுமானால் இமயமலையானாலும் குறைந்துவிடும்.
7. கங்கையானது வாக்கினால் சொல்லப்பட்டால் பாவம் செய்தவனைப் பரிசுத்தனாக்குகிறது; பார்க்கப்பட்டால் மங்களத்தைக் கொடுக்கிறது; ஸ்நானம் செய்யப்பட்டாலும் ஏழு தலைமுறை வரையில் குலத்தைச் சுத்தியடையச் செய்கிறது.
8. புண்ணியமும் பாவமும் இவற்றைச் செய்தவனுக்கு முந்திப் பரலோகம் போகின்றன. இவைகளைச் செய்பவன் பின்னே தொடர்கிறான்.
9. சான்றோர்களிடம் சத்தியம் நிலை பெற்றுள்ளது. சாதுக்களிடம் வணக்கம் நிலை பெற்றுள்ளது. திறமைசாலிகளிடம் செல்வம் நிலைத்திருக்கிறது. ஸ்ரீமந்நாராயணனிடத்தில் வெற்றி நிச்சயம்.
10. வீட்டைவிட்டு வெளிச்சென்ற சன்னியாசி போல இல்லறத்தவன் தன் வீட்டில் வசிக்க வேண்டும்.
11. நெருப்பு சிறிதானாலும் சுடுகிறது. விஷம் கொஞ்சமாயிருந்தாலும் கொல்கிறது.
12. பாலை விரும்புகிறவன் பசுவின் மடியை அறுத்தால் பாலைப் பெற முடியாது. அது போல, நீதிக்கு விரோதமாகப் பீடிக்கப்படும் ராஜ்யம் வளர்ச்சியடையாது.