அறம்

அறத்தின் வழி நில்! அஞ்ச வேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை, உன் கடவுளை, உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.
- ஷேக்ஸ்பியர்

அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர்.
- மேட்டாலிங்க்

அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம்.
- தியோக்னீஸ்

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.
- ஸெனீக்கா

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும்.
- ட்ரைடன்

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க.
- டால்ஸ்டாய்

அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அது போல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையை விட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.
- பேக்கன்

மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.
- ஷேக்ஸ்பியர்

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது.
- மேட்டாலிங்க்

நல்ல தகவல்கள் தீய தகவல்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல தகவல்களே.
- எட்வர்டு கார்ப்பெண்டர்

எல்லா நல்ல செயலும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு.
- ரஸ்கின்

என்ன செய்யலாம் என்று வழக்கறிஞர் கூறுவது தகவல் அன்று; என்ன செய்ய வேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம்.
- பர்க்

அற வாழ்வின் அளவுகோல் சிறப்பு முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.
- பாஸ்கல்

மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.
- ஷேக்ஸ்பியர்

விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.
- அகஸ்டைன்

நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரிக்காவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி.
- பென்தம்

அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமல் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.
- ஜார்ஜ் எலியட்

நம்மை நாம் வெல்லாதவரை அறம் எதுவும் இல்லை. உழைப்பு வேண்டாத செயல் எதுவும் மதித்தற்கு உரியதன்று.
- டிமெஸ்டர்

கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவறினூடே உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும்.
- எங்கல்

தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல செயல்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.
- பித்தாகோரஸ்

நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும்.
- ஜார்ஜ் எலியட்

அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.
- ப்ளேட்டோ

நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.
- எமர்ஸன்

மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன்; அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன்.
- ஷேக்ஸ்பியர்

நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்கும் கோலாகும்.
- மார்லி

பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னை விட்டுவிட மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.
- செயின்ட் பேஸில்

ஒருவனுக்கு ஆகாரம் அளிப்பதை விட, அதை அவனே தேடிக்கொள்ள வழி காட்டுவதே முக்கியம். ஒருவனுக்கு உதவி செய்வதை விட அவன் பிறர்க்கு உதவி செய்யக் கற்றுக் கொடுப்பதே நலம்.
- ஆவ்பரி

குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக் கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம்; உயர்ந்தோனாக மட்டும் இருக்க முடியாது.
- ப்ளூட்டார்க்

நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.
- கார்லைல்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.