1. காது பெரிசு; கேளாது, வாய் பெரிசு பேசாது, வயிறு பெரிசு உண்ணாது.
அது என்ன?
2. கால் உண்டு, நடக்காது; முதுகு உண்டு, வளைக்காது; கை உண்டு, மடக்காது.
அது என்ன?
3. உயிரில்லை, ஊருக்குப் போகும்; காலில்லை, வீட்டுக்கு வரும்; வாயில்லை, வார்த்தைகள் சொல்லும்.
அது என்ன?
4. வராதிருந்து வந்தது. வந்துவிட்டுப் போனது; போன பிறகு வந்தது: இனிப் போனால் வராது.
அது என்ன?
5. ஒன்றும் இரண்டும் கலப்பு; உள்ளங்கையால் பிடிப்பு; ஆவியிலே நடப்பு; ஆண்டவனுக்குப் படைப்பு.
அது என்ன?
6. வாயில் பற்கள் உண்டு, கடிக்காது; தலையைப் பிராண்டும், வலிக்காது; அழுக்கை அகற்றும், பூச்சியைப் பிடிக்கும்.
அது என்ன?
7. இறக்கை இல்லாத குருவிக்கு இரும்பிலே மூக்கு. பாய்ந்து செல்லும் குருவிக்குப் பஞ்சிலே வால்.
அது என்ன?
8. பாதாளத்தில் பிறந்து, பம்பரத்தில் சுழன்று, வெய்யிலில் காய்ந்து, அனைத்து வீட்டிலும் இருந்தது.
அது என்ன?
9. இலையுண்டு, கிளையில்லை; பூ உண்டு, மணமில்லை; காய் உண்டு, விதையில்லை; பட்டை உண்டு, கட்டை இல்லை; கன்று உண்டு, பசு இல்லை.
அது என்ன?
10. கழுத்து உண்டு, தலை இல்லை; உடல் உண்டு, உயிர் இல்லை; கையுண்டு, விரல் இல்லை.
அது என்ன?
விடைகள்:
1. அண்டா
2. நாற்காலி
3. கடிதம்
4. பல்
5. கொழுக்கட்டை
6. சீப்பு
7. ஊசி
8. பானை
9. வாழை
10. சட்டை
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.