மனித வாழ்வின் நான்கு நிலைகளிலும் அதாவது குழந்தை, குமரன், கிழவன், அமரன் என்ற நான்கு நிலைகளிலும் அவனுக்கு எத்தனை எத்தனைக் கால்கள் என்று குறிப்பிடும் ஒரு குழந்தைகள் விளையாட்டுப் பாடல் இது:
"தத்தகா பித்தகா நாலே கால்
தானே நடந்தால் ரெண்டே கால்
முத்திப் போனால் மூணேகால்
முடிவில் போவது பத்தேகால்.”
இந்தப் பாடலில் பொதிந்திருக்கும் பொருள்கள் உங்களுக்குத் தெரிகிறதா?
'தத்தகா, பித்தகா!' என்று தத்தித் தவழ்ந்து நடக்கும் பருவத்தில், குழந்தை தன் கைகள் இரண்டையும் ஊன்றி, இரண்டு கால்களையும் தவழவிட்டு நாலு கால்களில் நடப்பதைக் குறிக்கிறது.
பிறகு, இளைஞனான நிலையில், இரண்டு கால்களால் அவன் நடப்பதைக் குறிக்கிறது.
அதற்கு அடுத்த நிலையான முதுமையில் அதாவது, முத்தின கட்டையாகி விட்ட நிலையில் இரண்டு கால்களும் நடக்கத் தள்ளாடும் போது, ஒரு ஊன்றுகோலின் துணை கொண்டு மூன்று கால்களில் நடப்பதைக் குறிக்கிறது.
கடைசியில் மூச்சு அடங்கி, மரணம் அடைந்து அவன் அமரனாகிவிட்டதும், அவனை மயானத்துக்கு எடுத்துச் செல்ல நான்கு பேர் அவனைச் சுமந்து செல்ல, எட்டுக் கால்களும் அமரனின் இரண்டு கால்களும் சேர்ந்து பத்துக் கால்களுடன் அவன் இறுதிப் பயணம் இருக்கும்...!