1983 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து மெல்போர்ன் நகரத்திற்கு மாரத்தான் ஓட்டப் போட்டி தொடங்க இருந்தது.
மிகக் கடினமான போட்டி. 875 கி.மீட்டரைக் கடக்கக் குறைந்தது ஐந்து நாட்களாகும். பாதை மிகவும் கடினமானது. உலகப் புகழ்பெற்ற ஓட்டவீரர்கள் பலர் குழுமியிருந்தனர். எல்லோருக்கும் நைக், அடிடாஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதரவு வேறு.
மிடுக்கான ஓட்ட உடையில் விளையாட்டு வீரர்கள் ஜொலித்தனர். அவர்களின் சராசரி வயது 30 இருக்கும். ஆனால், அங்கே சற்றே வித்தியாசமான உடையுடன், நீளமான மேலங்கி. காலில் காலணிக்கு மேல் ரப்பர் காலுறைகள். வயது 60-க்கு மேலிருக்கும் ஒருவர் வந்தார்.
வேடிக்கை பார்க்க வந்தவரோ?
அனைவருக்கும் வியப்பு.
பத்திரிகை நிருபர்களில் ஒருவர் கேட்டார்.
‘‘நீங்கள் யார்? இங்கு என்ன வேலை?’’
‘‘என் பெயர் க்ளிப் யங். மெல்போர்ன் அருகே பண்ணையில் ஆடுகளைக் காப்பவன்”
‘‘நீங்கள் இந்த மாரத்தான் ஓட்டத்தில்....?’’
‘‘ஆம்! ஓடத்தான் வந்திருக்கிறேன்!’’
‘‘உங்களுக்கு உதவும் நிறுவனம் ஏதாவது இருக்கிறார்களா?’’
‘‘யாருமில்லை! ஆனால் நான் கட்டாயம் ஓடப்போகிறேன். 2000 ஆடுகள் உள்ள பண்ணை 2000 ஏக்கர் பரப்பளவு அவற்றை ஒன்று சேர்க்க 2,3 நாட்கள் ஓடிப் பழக்கம். இது என்ன, இன்னும் இரண்டு நாட்கள் அதிகம் அவ்வளவுதானே!’’
ஐயோ பாவம்! சொன்னாலும் இந்தப் பெரியவர் கேட்க மாட்டேன் என்கிறாரே!
மாரத்தான் துவங்கிவிட்டது. உலகப் புகழ் ஓட்டக்காரர்கள் யங்கைத் துவக்க இடத்திலேயே விட்டுவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர்.
கூட்டம் யங்கைப் பார்த்து நகைத்தது. சரியாக ஓடத் தெரியவில்லை, மெதுவாக சாவகாசமாக ஓடுகிறார், இதோ கத்துக்குட்டி மாதிரியல்லவா ஓடுகிறார். சொன்னால் கேட்டால்தானே!
எல்லா ஓட்டக்காரர்களுக்கும் இப்பந்தயம் முடிய மூன்று நாட்கள் ஆகும் என்று தைரியம். ஆம்! 18 மணி நேரம் ஓட வேண்டும். 6 மணி நேரம் மட்டும் உறக்கம். இதுகூட க்ளிப்-புக்குத் தெரியவில்லையே. ஆனால்...
பந்தயத்தின் நான்காம் நாள் காலை வந்த செய்தி யாவருக்கும் வியப்பளித்தது.
இன்னும் பந்தயத்தில் க்ளிப் யங் தொடர்ந்து ஓடுகிறாராம்! ஒரு வழியாக மிட்டகாங் என்ற நகரத்தை அடைந்துவிட்டாராம். மற்ற வீரர்கள் இவருக்குப் பின்னே வெகுதூரத்தில்! உண்மையாகவா!
முதல் நாளுக்குப் பின் க்ளிப் நிற்காமல் ஓய்வெடுக்காமல் ஓடிக்கொண்டிருந்தார். ஒவ்வோர் இரவும் முன்னே ஓடும் புகழ்பெற்ற வீரரை நெருங்கியிருக்கிறார். 4-ஆம் நாள் இரவு எல்லோரையும் பின்னுக்குத் தள்ளியாயிற்று.
மெல்போர்னை 9 மணிநேரம் முன்பே அடைந்துவிட்டார்.
இத்தனை ஆண்டுகளில் இது ஒரு சாதனை! க்ளிப் யங் உலகப் புகழ் பெற்றுவிட்டார்!!
அதற்குப் பிறகு அந்த மாரத்தான் வீரர்கள் க்ளிப் யங் மாதிரி உறங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆம். அவரைப் போல இரவு பகல் ஓடினால்தான் முதலாவதாக வர முடியும். அவர் மாதிரி ஓடினால் களைப்பும் இருக்காது. சாதிக்க முயலும் மனிதா! உன்னால் சிறந்த செயலைச் செய்ய முடியும். வயது பற்றிக் கவலையில்லை, போட்டியின் தகுதி பற்றிக் கவலையில்லை. என்னால் நிச்சயம் முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டுமே யங்கின் மூலதனம்.
(இணையத்தில் படித்தது)