சில சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவைச் சேர்ந்த கலிஃபோர்னியா மாநிலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
அந்தப் பிரதேசத்தில் சிக்யோயாஸ் (Sequioas) என்ற மிகவும் உயரமான பெரிய மரங்கள் அருகருகே அடர்த்தியாக வளர்ந்திருப்பதைக் கண்டனர்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற அந்த வழிகாட்டி அவர்களிடம் அந்தப் பெரிய மரங்களைக் காட்டி, "இவ்வளவு பெரிய மரங்களின் வேர்கள் பூமியில் ஆழமாகச் செல்வதில்லை. இவைகளுடைய வேர்கள் பூமிக்குள் சில அடிகள் தூரம் வரைதான் செல்கின்றன” என்று கூறினார்.
"அது எப்படி சாத்தியம்? இவ்வளவு பெரிய மரத்தை அந்தச் சிறிய வேர்களினால் கட்டாயம் தாங்கிக் கொள்ள முடியாது. புயல் காற்று வீசும்போது அந்த மரம் வேரோடு சாய்ந்துவிடும்” என்று பயணி ஒருவர் மறுப்பு தெரிவித்தார்.
அதற்கு அந்த வழிகாட்டி, "இந்த மரம் தனியாக வளர்வதில்லை. இந்த மரங்கள் அருகருகே வளர்ந்து ஒரு தோப்பைப் போன்று காட்சி தருகின்றன. ஒவ்வொரு மரத்தினுடைய வேரும் பக்கத்தில் இருக்கும் மற்ற மரங்களின் வேர்களோடு இணைந்து பின்னிக் கொள்கின்றன. புயல்காற்று வீசும்போது ஒவ்வொரு மரமும் தன் பக்கத்தில் இருக்கும் மரங்களைத் தாங்கிக்கொள்கிறது.” என்று கூறினார்.
இயற்கையின் இந்தப் படைப்பில் மனித இனம் ஒரு மிகப் பெரிய படிப்பினையைக் கற்றுக் கொள்ள முடியும். இந்த மரங்களைப் போன்று, ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ்ந்து வந்தால், சோதனைகள் என்ற புயல் காற்றுகள் மனித இனத்திற்கு எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.