வாழ்க்கை வாழ்வதற்கே! உடம்பிற்கு நோய் இயற்கையன்று! செயற்கையே! உடம்பை 'நடமாடும் கோயில்' என்று திருமூலர் பாராட்டுவார். உடம்பை இழிந்ததென்று நினைத்து அலட்சியமாக வாழ்கிறவர்கள், பிறகு நோயை வரவழைத்துக் கொள்கின்றனர்.
அதன் பிறகு, வேறு வழியின்றி தூய்மையான தண்ணீர், தூய்மையான உணவு, தூய்மையான சிந்தனை இவற்றைக் குறித்தக் காலத்தில் உடம்புக்கு வழங்கினால் உடம்பு நல்லவிதமாக இயங்கும். நம் விருப்பம் போல் ஒத்துழைக்கும்.
திருக்கோயிலில் அகன்ற வளாகத்தில் நல்ல மூச்சுக் காற்று உண்டு. உயர்ந்த மதில்கள் சூழ அமைந்திருப்பதால் தூய்மையான தண்ணீருண்டு! இறைவனுக்குப் படைக்கும் காய்களும் கனிகளும் உணவிற் சிறந்தவை! இவற்றை உண்டு வந்தால் ஏன் நோய் வருகிறது? திருக்கோயில் தூய்மையாக இருந்தாலும் திருக்கோயிலைச் சார்ந்துள்ள வீதிகள் எப்போதாவது தூய்மை கெட்டுப் போயிருந்தால் திருக்கோயில் வளாகமும் கெடும்.
அதனால் அப்பரடிகள் திருக்கோயில் வளாகத்தைத் தூய்மை செய்ததுடன் திருக்கோயிலைச் சார்ந்திருந்த வீதிகளையும் தூய்மை செய்தார். 'பார் வாழத் திருவீதிப் பணி செய்து பணிந்தேத்தில் பரவிச் செல்வார்' என்ற இச்செய்தியினைப் பெரியபுராணம் பாராட்டுகிறது.
ஆதலால், திருக்கோயிலைச் சார்ந்து ஒரு தூய்மை இயக்கம் வளர்ந்தது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப் பெற்றது. தூய்மையே இறைமை என்ற கொள்கை உயர்த்திப் பிடிக்கப் பெற்றது.