தலைச்சிறந்த மாணவர், அன்னப்பறவை மற்றும் பசுவைப் போன்றவர். இடைநிலை மாணவர், மண்ணும் கிளியும் போன்றவர். கடை மாணவர், ஓட்டைக் குடமும் ஆடும் எருமையும் நெய்யரியும் (பன்னாடை) போன்றவர்.
எப்படி என்று அறியலாமா?
* அன்னப்பறவை பாலையும் நீரையும் வெவ்வேறாகப் பிரித்துப் பாலைக் குடிக்கும். அதுபோன்று தலைசிறந்த மாணவர் குணத்தையும் குற்றத்தையும் வெவ்வேறாகப் பிரித்துக் குணத்தை மட்டும் ஏற்பர். பசு புல்லை நிரம்ப மேய்ந்து, பின் ஓரிடத்தில் இருந்து உண்டதை அசைபோடும். அவ்வாறே சிறந்த மாணவர் ஆசிரியரிடமிருந்து கற்ற கல்வியை வீட்டிற்கு வந்து சிறிது சிறிதாக நினைவில் கொண்டு வந்து கிரகித்துக் கொள்வர்.
* மண் உழவர் முயற்சிக்கு ஏற்பப் பலனளிக்கும். அதுபோல் இடை மாணவர் ஆசிரியர் கற்பிக்கும் முயற்சிக்கு ஏற்பக் கல்விப் பயனை அடைவர். கிளி தனக்குக் கூறியதை மட்டுமே சொல்லும். அவ்வாறே இடை மாணவர் தனக்குக் கற்பிக்கப்பட்டதை அன்றி மற்றவற்றைச் சொல்ல மாட்டார்கள்.
* ஓட்டைக்குடம் வார்க்கும்தோறும் வெளியே நீரை விட்டுவிடும். அதைப் போன்று கடை மாணவர் நூலைக் கற்றவுடன் மறந்துவிடுவர். ஆடு ஓரிடத்தில் தழை நிறைந்திருப்பினும் வயிறு நிறைய மேயாது. பல செடிகளிலும் போய் மேயும். அவ்வாறே கடை மாணவர் கல்வி நிறைந்த ஓர் ஆசிரியரிடம் முழுமையாகக் கற்காமல் பல ஆசிரியர்களிடம் சென்று கல்வி கற்க முயல்வர். எருமை நீர்நிலையில் நீரைக் கலக்கிய பின்பே அதை அருந்தும். அதைப் போன்று கடை மாணவர் ஆசிரியரை வருத்தி, கலங்கிய கல்வியைப் பெறுவர். பன்னாடை தேன் முதலானதை வெளியே ஒழுகவிட்டு அழுக்கை மட்டுமே தேக்கிக்கொள்ளும். அவ்வாறு கடை மாணவர் நல்லவற்றை மறந்து தீயவற்றையே உள்ளத்தில் கொள்வர்.