தாதா ஜே.பி.வாஸ்வானி என்பவர் விமான நிலையம் செல்ல ஒரு வாடகைக் காரில் ஏறினார்.
திடீரென்று கார் பார்க்கிங்கிலிருந்து வெளிவந்த அந்தக் கார், அவரது வாடகைக் காரின் முன் குறுக்கே பாய்ந்தது.
அந்த வாடகைக் கார் ஓட்டுநர் குறுக்கே புகுந்த காரின் மீது இடிக்காமல், வண்டியை நிறுத்தினார்.
ஆனால் குறுக்கே வந்த காரின் ஓட்டுநர் கைகளை நீட்டி, ''என்னய்யா இப்படி வந்து மோதுறியே?'' என்று வாடகைக் கார் ஓட்டுநரைப் பார்த்துக் கூச்சலிட்டார்.
வாடகைக் கார் ஓட்டுநரோ நட்பாகக் கையசைத்தார்.
அதனைக் கண்ட தாதா ஜே.பி.வாஸ்வானி ஓட்டுநரிடம், ''நீங்கள் பிரேக் போடவில்லை என்றால் விபத்து நடந்திருக்கும். ஆனால், நீங்கள் குறுக்கே புகுந்த கார் ஓட்டுநரிடம் சிரித்துக் கையசைக்கிறீர்களே, இது சரியா?'' என்று கேட்டார்.
அதற்கு வாடகைக் கார் ஓட்டுநர், ''ஐயா, பலர் குப்பை லாரி போன்றவர்கள். அவர்கள் பல கழிவுகளான எரிச்சல், கோபம் ஆகியவற்றை முழுவதுமாக அடைத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அவர்களிடமிருக்க்கும் பல்வேறு விதமான குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் தேவை; சில வேளைகளில் உயர்வான உங்களைப் போன்றவர்கள் மீது கூடக் கொட்டி விடுவார்கள். எனவே, நாம் அதை நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. சிரித்துக் கையை அசைத்து அவர்களையும் வாழ்த்தி நம் வழியில் செல்ல வேண்டும். பிறரின் குப்பைகளை நாம் ஏற்றுகொள்ள வேண்டியதில்லை. இதே போல், நம்மிடமும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளைப் பணியிடம், வீடு மற்றும் தெருவில் செல்வோரிடம் கொண்டு கொட்ட வேண்டியதுமில்லை'' என்றார்.
ஓட்டுநரின் பதிலிலிருந்து தாதா ஜே.பி.வாஸ்வானி கற்றதை, 'குப்பை லாரித் தத்துவம்' என்றார்./div>
- உ. தாமரைச்செல்வி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.