ஸ்ரீநாராயணகுருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் பெரும் மகான்.
அவரது மேன்மைகளைப் பற்றி அறிந்த ஓர் அரசு அதிகாரி அவரைத் தனது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார்.
அந்த அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்குப் பெயர் போனவர். அவரைப் பற்றி சட்டம்பி சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும், விருந்துக்கு அவரது சீடர்களும் வருவார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
அதற்கு அந்த அதிகாரியும் சம்மதித்தார்.
குறிப்பிட்ட நாளன்று சட்டம்பி சுவாமிகள் தனியாக அந்த அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்.
அதிகாரி, "சுவாமிஜி, தங்களது சீடர்களெல்லாம் எங்கே?” என விசாரித்தார்.
"அவர்கள் வெளியே உள்ளார்கள், உணவு பரிமாறியதும் வருவார்கள்'' என்றார் சுவாமிகள்.
உணவு பரிமாறப்பட்டதும் சுவாமிகள், "அருமைச் சீடர்களே, உள்ளே வாருங்கள்'' என்று உரக்க அழைத்தார்.
உடனே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பல தெரு நாய்கள் வரிசையாக வந்து ஒவ்வோர் இலையிலும் அமர்ந்து பரிமாறப்பட்டிருந்த உணவுகளை உண்டன.
அந்த நாய்கள் சத்தம் ஒன்றும் செய்யாமல், உண்டுவிட்டு, வந்தது போலவே வரிசையாகத் திரும்பிச் சென்றன.
அட, நாய்களுக்கு இவ்வளவு அடக்கமும், அமைதியுமா? என்று அந்த வீட்டிலிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அப்போது சுவாமிகள் சிரித்துக் கொண்டே அவர்களிடம், ''இவை இப்போது சாதாரண நாய்கள்தான்; ஆனால், முன்பிறவியில் இவர்கள் ஊழல் செய்தவர்கள். அவர்கள் செய்த ஊழல்களின் பலனாக இந்த நாய்ப் பிறவியைப் பெற்று, அதற்கான தீயவினைகளை அனுபவிக்கின்றனர்'' என்றார்.
அதைக் கேட்டதும் அந்த அதிகாரி கலங்கினார்.
அவரது அகக்கண் திறந்தது. அன்று முதல் தனது ஊழல் செயல்களை விட்டு நல்ல வாழ்க்கை வாழத் தொடங்கினார்.