மனிதப் பிறப்பு எடுத்ததனால் மட்டுமே எல்லோரும் மனிதர்கள் ஆக மாட்டார்கள். மனிதப் பண்பு இருந்தால்தான் மனிதர்களாக ஆக முடியும். மக்கட்பண்பு இல்லாத மனிதர்கள் எல்லாம் மனித விலங்குகள் ஆவர் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார். அவர் மேலும், மனித விலங்குகள் பற்றியும், மனிதர்களின் வகைகளைப் பற்றியும் சொல்வதைத் தெரிந்து கொள்ளலாம்.
விலங்குகள் புண்ணிய பாவங்களைப் பகுத்துணராது திரியும். தாய், தங்கை என்ற பகுப்பின்றி வாழும். ஒன்றையொன்று அடித்துத் தின்னும். அதுபோல், பகுத்துணர்வு இன்றித் திரிந்தும், முறைமை இன்றி ஒழுங்கீனமாக இன்பத்தைத் துய்த்தும், ஆடு, கோழி, மீன் முதலிய வாயில்லாதவைகளைக் கொன்று தின்றும் திரிகின்றவர்கள் மனித உடம்போடு கூடிய விலங்குகள் ஆவர்.
மனிதரில் குருவி
மனிதர்களுக்குள் குருவிகளும் உண்டு. அதாவது குருவியின் தன்மையுடைய மனிதர். குருவிகள் ஏரியில் தண்ணீர் உள்ளவரை அங்கேயே அகலாமல் இருக்கும். ஏரி நீர் வற்றிவிட்டால் அதிலுள்ள மீன் முதலியவற்றைத் தின்று ஏரியை விட்டு நீங்கிவிடும். அதுபோல், நம்மிடம் செல்வமுள்ளவரை வட்டமிட்டுக் கொண்டிருந்து வறுமை வந்தபின் திரும்பிக் கூடப் பாராமல் விலகிச் செல்கின்ற மனிதர்கள் குருவிகள்.
மனிதரில் கழுகு
கழுகு பிணங்களைப் பிடுங்கித் தின்னும். அதே போல் பிறருடைய சொத்தைப் பிடுங்கித் தின்பவரும் செத்துப் போனவைகளைத் தின்பவரும் கழுகுகள்.
மனிதரில் நரி
குள்ளநரி தந்திரமிக்கது. குள்ளநரி ஆட்டு மந்தைக்கு இரவில் வந்து, ஆடு மேய்ப்பவனுடைய தொந்தரவை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, ஆட்டைக் கத்தவொட்டாமல் ஊட்டியைப் பிடித்து அதன்மேல் சாய்ந்து கொண்டு வாலால் அடிக்கும். ஆடு பயந்து நரியைத் தூக்கிக் கொண்டு ஓடும். சிறிது தூரம் சென்றபின் நரி ஆட்டைக் கடித்துக் கொன்று தின்னும்; அதுபோல், தந்திரமாக வந்து ''அங்கே ஓர் அதிசயமுள்ளது'' என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி அழைத்துக் கொண்டு போய் யாருமற்ற இடத்தில் வாயில் துணியை அடைத்துக் கொல்லும் கொடியவர்கள் குள்ள நரிகள்.
மனிதரில் புழு
புழு புண்ணில் இருந்து குடையும் தன்மையையுடையது. அதுபோல், நம்மை ''அதைக் கொடு'', ''இதைக் கொடு'' என்று குடையும் இயல்புடையவர்கள் புழுக்கள்.
மனிதரில் மீன்
குறவை என்பது ஒரு வகை மீன். அது சேற்றிலேயே இருக்கும். அதுபோல், காம மயக்கமாகிய சேற்றிலும் அநாசாரமாகிய சேற்றிலும் உள்ளவர்கள் குறவைகள்.
மனிதரில் யானை
யானை மதம் கொண்டு திரியும். பலநாள் உணவு கொடுத்து வளர்த்த பாகன், ஒருநாள் உணவில் ஒரு கவளத்தை எடுத்துக் கொண்டால் அப்பாகனைக் கொன்று விடும். அதுபோல், செருக்குற்றுத் திரிபவரும், பற்பல நன்றி செய்த நல்லவர்களை ஒரு சிறிது தீமையைக் குறித்துக் கொல்லும் தன்மையுடையவர்களும் யானைகள்.
மனிதரில் மரம்
மரம் தன்னையும் அறிந்து கொள்ளாது. தன்னை உடைய தலைவனையும் அறிந்து கொள்ளாது. அதேபோல் தன்னையும் தன் தலைவனையும் அறியாது கடவுளில்லை, முத்தியில்லை, மறுமையில்லை என்று பிதற்றித் திரிபவர்கள் மனித மரங்கள்.
மனிதரில் உள்ள பிற வகைகள்
மனிதர்களுக்குள் நாய்கள், பேய்கள், எருமைகள், தேள்கள், நட்டுவக்காளிகள், புலிகள், பூனைகள் முதலிய பற்பல வகையுண்டு. அனுபவத்தில் அவன் எருமையாயிற்றே, அவன் நாய், அவன் பூனை என்றெல்லாம் பேசுவது கண்கூடாகக் காண்கிறோம்.
அயலுடைமைக்குப் பேயாய் பறப்பவன் – பேய்.
பிச்சைக்காரன் மேல் வீழ்ந்து அதட்டிக் குலைக்கின்றவன் – நாய்.
பிறர் ரகசியம் பேசும்போது ஒற்றுக் கேட்பவன் – சுவர்க்கோழி.
பிறர் துன்பம் தெரியாதவன் – தேள்.
நல்ல விஷயத்தில் பதுங்கிப் பின்வாங்குபவன் – பூனை.
உறுதியில்லாமல் இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கையாக மாறுபவன் – பச்சோந்தி.
சமயம் மாறுபவன் – ஆடு.
இப்படி மனிதர்களை வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.