'உ' என்பது பிள்ளையார் சுழி.
ஒன்றை எழுதத் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
ஒரு செயலின் தொடக்கத்தையும் ''பிள்ளையார் சுழி'' என்றே கூறுகிறார்கள். எழுதத் தொடங்கும் முன்பு 'உ' என்ற பிள்ளையார் சுழியைத் தொடக்கத்தில் புனைந்து, அவரை வழிபட்ட பிறகே தொடர்ந்து எழுத வேண்டும். காரணம், தெய்வங்களில் முதல் வழிபாட்டிற்குரியவர் விநாயகர்.
விநாயகர் ஓங்கார வடிவினர். உற்று நோக்கினால் அவரது திருவடிவம் 'ஓம்' என்ற வடிவத்தில் இருப்பதைப் பார்க்கலாம். 'உ' என்ற பிள்ளையார் சுழி, 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும், விநாயகர் என்ற பிரணவ மூர்த்தியையும் ஒருங்கே குறிப்பிடுகிறது.
அ + உ + ம் என்ற மூன்றெழுத்துக்களின் கூட்டொலியே ஓம். இந்த மூன்று எழுத்துகளில் நடு எழுத்தான உகர வடிவமே பிள்ளையார் சுழி.
"அகர உகரம் ஆனாய் போற்றி” என்பது விநாயகர் போற்றியில் ஓரடி.
எழுத்துகளில் முதன்மையான எழுத்து அகரம். தெய்வங்களில் முதன்மையான விநாயகர், அகரத்தைப் போன்றவர், உகரத்தை போன்றவர் விநாயகர். அதாவது, ஓம் என்ற வடிவமாக இருப்பவரும் அவரே; அதற்கும் மையமான உகரமாக இருப்பவரும் அவரே. அல்லது, ஓம் என்ற வடிவத்தின் திரிந்த வடிவமே 'உ' என்ற 'பிள்ளையார் சுழி' என்றும் கூறலாம்.