கிழக்கு துருக்கியில் உள்ள பண்டைய கற்கால தளமான கோபெக்லி டெபே (Göbekli Tepe) தூண்களிலும், அங்கு கிடைத்த இதர பொருட்களிலும் பல விலங்கு உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அங்கு சித்தரிக்கப்பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பாம்பு. துருக்கியர்கள், குர்துகள், யெசிடிகள் மற்றும் ஈரானியர்களின் நாட்டுப்புறக் கதைகளில் அனடோலியா முழுவதும் பாம்பு இரண்டு முக்கிய அவதாரங்களில் இருப்பது சுவாரஸ்யமானது. ஒரு அவதாரம் கருவுறுதலின் அடையாளமாக உள்ளது. ஆனால், மற்றொரு அவதாரம் அழியாமையின் அடையாளமாக உள்ளது. மேலும், இந்த குறியீடானது கில்காமேஷின் காவியத்தில் முக்கியமானது. இதில் நாயகனுக்கு அழியாமையின் ரகசியம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர் தூங்கும்போது அது அவரிடமிருந்து ஒரு பாம்பினால் திருடப்படுகிறது. பாம்பின் அழியாத தன்மை அவற்றின் தோலை உதிர்ப்பதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
பாம்பு என்பது அனடோலியா முழுவதும், குறிப்பாக தென்கிழக்குப் பிராந்தியத்தில் பழமொழிகள், புனைவுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் எங்கும் நிறைந்த ஒரு அங்கமாகும். ஆனால், கோபெக்லி டெபேவில் நாம் பார்க்கும் சிற்பங்கள் பண்டைய கலைகளில் எங்கும் இல்லை. கோபெக்லி டெபேவைப் பார்வையிடும் போது, அங்கு ஏராளமான பாம்புகள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணும் போது, ஷாமாரன் மற்றும் அவரது மனிதக் காதலரின் கதையைப் பற்றி எண்ணத் தோன்றும்.
அந்தக் கதை இதுதான்...!
தகமாச்ப் (Tahmasp) என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் உயரமாகவும் அழகாகவும் இருந்தான். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தான்.
ஒரு நாள், அவனும் அவனது நண்பர்களும் காட்டைச் சுற்றி விறகு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தேன் நிறைந்த கிணற்றைக் கண்டார்கள். தேனை எடுக்க முடிவு செய்தனர்.
தேனை எடுப்பதற்காக தகமாச்ப் கிணற்றில் இறங்கினான். ஆனால் தேன் கையில் கிடைத்ததும், அவனது நண்பர் அவனைக் கிணற்றில் விட்டுவிட்டுச் சென்று விட்டான். அவன் திரும்பி வரவில்லை என்பதை உணர்ந்ததும், நம்பிக்கையை இழந்தான் தகமாச்ப். கிணற்றின் அடிப்பகுதியில் ஒரு துளை இருப்பதைக் கண்டான். அவன் தனது கத்தியைப் பயன்படுத்தி துளையை, நுழையும் அளவுக்கு பெரிதாக்கினான். அதில் நுழைந்துச் சென்றான். அப்போது அங்கு அவன் ஒரு பெரிய குகைப் பகுதியைக் கண்டான். கடுமையாய் முயன்றதால், சுற்றிப் பார்த்த பின் களைத்துப் போய் உறங்கிப் போனான்.
கண் விழித்த போது, சுற்றிலும் ஆயிரக்கணக்கான பாம்புகள் இருப்பதைக் கண்டான்.
பாம்புகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. அவன் நகர்வதை பாம்புகள் கவனித்தவுடன், அவை அவனை அணுக ஆரம்பித்தன. அவற்றால் அவன் கொல்லப்படுவான் என்று நினைத்தான். அவன் மிகவும் உதவியற்றவனாய் உணர்ந்தான்.
அவன் கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களைத் திறந்தான். அவனுக்கு முன் பாதி மனித உருவும் பாதி பாம்பாகவும் இருந்த ஒரு அழகான இளம் பெண்ணைக் கண்டான். அவன் மிகவும் ஆச்சரியமடைந்தான். ஆனால், அந்த விசித்திரமான உயிரினம் ஒன்றும் செய்யாமல், “பயப்படாதே. நாங்கள் உங்களைக் காயப்படுத்த மாட்டோம். நான் சாமாறன். நான் பாம்புகளின் ராணி. நீங்கள் எங்கள் விருந்தினர். இப்போது, நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், நீங்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்; நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். நாளை பேசுவோம்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
தகமாச்ப் கனவு காண்பதாய் நினைத்தான். பிறகு, அவன் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் தூங்கிப் போனான்.
காலையில், தகமாச்ப் விழித்தபோது, ஒரு பெரிய அறையில் தன்னைக் கண்டான். அருகிலேயே சாமாறன் ஒரு ஆடம்பரமான காலை உணவு போடப்பட்டிருந்த மேஜையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகில் முழுவதுமாக மயங்கிய போதும், எச்சரிக்கையுடன் மேசை முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்தான். சாமாறனை விட்டு அவனால் கண்களை எடுக்க முடியவில்லை. அவர்கள் ஒன்றாகக் காலை உணவைச் சாப்பிட்டார்கள், சாமாறன் மனித குல வரலாற்றைப் பற்றிய கதைகளை அவனிடம் சொன்னாள். தகமாச்ப் கதைகளால் கவரப்பட்டான். சாமாறனின் கருணை மற்றும் அவளது ஆறுதலான அக்கறையால் ஈர்க்கப்பட்டான். பிறகு வெகு காலத்திற்கு அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
அவளுடன் மகிழ்ச்சியாய் இருந்த போதிலும், தகமாச்ப் தனது குடும்பத்தை எண்ணி, இன்னும் வெறுமையாய் உணர்ந்தான். சாமாறனுக்கு அவனை விட விருப்பமில்லை, ஆனால் அவள் அவனை மிகவும் நேசித்ததால், அவள் அவனை மேலே உள்ள நில உலகத்திற்குத் திரும்ப அனுமதித்தாள். ஆனால், சாமாறனின் பாதாள ராஜ்ஜியம் மற்றும் பாம்புகளின் தேசம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவள் அவனை எச்சரித்தாள். அவனுடன் நீண்ட காலம் இருந்ததால், பாம்புகளின் தேசத்தின் சில குணாதிசயங்களை அவன் எடுத்துக் கொண்டான் என்றும், அவள் அவனை எச்சரித்தாள். மற்றவர்களுடன் குளிக்க வேண்டாம் என்று அவள் அவனிடம் சொன்னாள். ஏனென்றால் நீருடன் தொடர்பு கொண்டால் அவனுடைய தோல் ஒரு பாம்புத் தோலின் தோற்றத்தை எடுக்கும் மற்றும் மனிதகுலம் அவனுடைய ரகசியத்தை அறிந்து கொள்ளும் என்பதையும் வலியுறுத்தினாள்.
தகமாச்ப் மேற்பரப்புக்குத் திரும்பி, தனது வாழ்க்கையைத் தொடங்கினான். சாமாறனுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தகமாச்ப் வாழ்ந்த நில உலகின் மன்னன் நோய்வாய்ப்பட்டான், மேலும் அவனது நோய்க்கான ஒரே தீர்வு சாமாறனின் இறைச்சியை உண்பதுதான் என்று அவரது மருத்துவர்கள் சொன்னார்கள். பாம்புகளின் பாதாள சாம்ராஜ்யத்தைப் பற்றி அறிந்தவர்கள் நாட்டில் இருப்பதாகவும், அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரே வழி அவர்கள் மீது நீரை ஊற்றுவதுதான் என்றும் அவர்கள் கதை சொன்னார்கள். ஏனென்றால், நீர் அவர்களின் தோலை பாம்பு போல செதில்களாக மாற்றும். இந்த வழியில் அவர்கள் சாமாறனின் ராஜ்யத்திற்குள் செல்லும் வழி தெரிந்த ஒருவரைக் கண்டுபிடிக்க முடியும் என்று அறிந்திருந்தனர்.
எனவே, அரசர் அனைவரையும் பொதுக்குளியலுக்குச் செல்லுமாறும், படைவீரர்களின் கண்களுக்குக் கீழே நீரில் மூழ்கும்படியும் கட்டளையிட்டார். தகமாச்ப் மறைந்து கொள்ள முயன்றான், ஆனால் வீரர்கள் அவனை நகரக் குளியலறைக்கு அழைத்துச் சென்று உள்ளே வீசினர். சாமாறன் சொன்னது போல், அவனது தோல் ஒரு பாம்பின் தோற்றத்தை எடுத்தது. வீரர்கள் அவனை நீரிலிருந்து இழுத்து, நன்றாய்க் கட்டினர். அவனை அரசரிடம் அழைத்துச் சென்றனர்.
சித்திரவதையினால், அவன் தனது ரகசியத்தை வெளியிட வேண்டி வந்தது. வீரர்கள் கிணற்றுக்குச் சென்று பாம்புகளின் ராஜ்யத்திற்குள் நுழைந்து, சாமாறனைப் பிடித்து அரசனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
சாமாறனைப் பார்த்ததும் தகமாச்ப் வெட்கமும் வருத்தமும் அடைந்தான். பிறகு சாமாறன் படை வீரர்களிடமும் அரசனிடமும் திரும்பி “நான் இறக்கப் போகிறேன், என்னைப் பற்றிய ரகசியத்தைக் கூறுகிறேன். என் வால் பகுதியையும் உடல் பகுதியையும் உண்பவர்கள், அளவுகடந்த ஞானத்தையும் நீண்ட ஆயுளையும் அடைவான். ஆனால் என் தலையை உண்பவன் சாவான்." அதன் பேரில், மன்னரின் காவல்படையின் தலைவன் சாமாறனைக் கொன்று மூன்று துண்டுகளாக வெட்டினான். காவல்படையின் தலைவன், ஞானத்தைப் பெற விரும்பி, அவளது வாலின் ஒரு பகுதியைச் சாப்பிட்டான், அரசன் அதன் உடல் பகுதியை உண்டான். அதே சமயம் சாமாறனின் மரணத்தைக் கண்டு கலங்கிய தகமாச்ப், இறக்க விரும்பி அவளது தலையின் ஒரு பகுதியை நுகர்ந்தான். ஆனால் அவனுக்கு எதுவும் ஆகவில்லை. அரசனைப் போலவே காவல்படையின் தலைவன் சுருண்டு விழுந்து இறந்தான். உண்மை என்னவென்றால், சாமாறனின் ஞானம் அவள் தலையில் நிரம்பி இருந்தது.
இப்போது தகமாச்ப்பின் ஒரு பகுதியாய் அது ஆனது. இருப்பினும், சாமாறனை இழந்த சோகத்தை தகமாச்ப்பினால் தாங்க முடியவில்லை, அதனால் அவன் தனது வீட்டை விட்டு வெளியேறி, நிலத்திலிருந்து நிலம் மற்றும் மலையிலிருந்து மலை வரை நாடு முழுவதும் அலைந்து திரிந்தான், மேலும், அவன் ஒரு பேரறிஞனாக அறியப்பட்டான். ஆனால், சாமாறன் எப்படி கொல்லப்பட்டாள் என்பது பாம்புகளுக்குத் தெரியும் என்றும், அதன் காரணமாகவே பாம்புகள் மனிதனின் கொடிய எதிரியாக மாறியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.