ஐந்தும் நம் விரல்களே!
ஐந்து விரல்கள் உடைய நம் கையில்
ஐந்து விரல்களும் உயர்வேதான் !
ஐந்து விரல்களில் ஒன்றுத வாவிடில்
ஐந்தும் பலத்தினை இழப்பதுண்டு !
எழுதத் தெரியும் என்று சொல்கின்றாய்
எப்படி உன்னால் முடிகிறது ?
எழுத உதவியாய்க் கட்டை விரலுடன்
இருப்பவை நடுவிரல் சுட்டுவிரல் !
நடுவிரல் இன்றி எதையும் பிடித்தால்
நலிந்து போகும் கைவலிமை !
முடுக்கிய வேலையில் வெற்றியின் பரிசாய்
மோதிரம் போட அடுத்த விரல் !
வெற்றியைக் குறித்துச் சுட்டுவ தென்றால்
வேண்டும் உனக்குக் கட்டைவிரல் !
வெற்று விரலாய்ச் சுண்டு விரலையும்
வீணாய்க் கேலி பேசாதே !
சுண்டு விரலால் என்ன புண்ணியம்
சொல்ல முடியுமா உன்னாலே ?
சுண்டு விரலை இழந்தவர் சாப்பிடச்
சோற்றைப் பிசைவது பெரும்பாடு !
ஒற்றுமையாக விரல்கள் இருப்பதால்
உந்தன் கைக்கு மிகுந்த பலம் !
ஒற்றுமையாக மக்கள் வாழ்வது
ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்த வளம் !
- கவிஞர். செல்ல. கணபதி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.