கி. ரா. சிறுகதை காட்டும் மாற்றுப்பாலினத்தின் மனவெளி
ம. செந்தில்குமார்
முன்னுரை
காலந்தோறும் தோன்றிய இலக்கியங்கள் அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் கண்ணாடியாக இருந்து அச்சமூகத்தைக் காட்டி வருகிறது. அந்த வகையில் ஆங்கிலேயர் வருகையால் தோன்றிய சிறுகதை இலக்கியமும் மிக முக்கியமான பங்களிப்பைத் தருகிறது. சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் கல்கி என்ற மிகப்பெரிய ஆளுமைகள் சிறுகதைகளைப் படைத்திட்டப் பிறகு “மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் சென்றேன் அப்போதும் பாடத்தைக் கவனிக்காமல் மழையையே இரசித்து விட்டு வந்து விட்டேன்” என கூறும் கி. ரா முறையான கல்வியறிவினைப் பெறாமல் தன் மண் சார்ந்த மக்களின் வாழ்வியலை அனுபவத்தின் ஊடாகப் பெற்றுத் தன் முப்பாதாவது வயதில் எழுதத் தொடங்கியவர். 1958-ல் சரஸ்வதி இதழுக்கு எழுதிய மாயமான் எனும் சிறுகதை மூலம் தன்னை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டவர். அதனைத் தொடர்ந்து இறவாப் புகழ் பெற்ற பல்வேறு படைப்புகளைத் தமிழ் உலகிற்கு வழங்கியவர் கி. ரா. இவர் 1964-ல் தீபம் இதழுக்காக எழுதிய கதை ‘கோமதி’. இக்கதையில் 30 வயது மதிக்கத்தக்க கோமதி செட்டியார் என்கின்ற ஆண் உருவம் பெற்று பெண் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கிய மாற்றுப்பாலினத்தின் மனவெளியைக் காணமுயலும் இக்கட்டுரை, முதலில் கி. ரா. வின் படைப்பாளுமையையும், பின் அக்கதைக் காட்டும் மூன்றாம் பாலினத்தின் மனவெளியையும் அக்காலச் சமூகம் மூன்றாம் பாலினத்தின் மீது கொண்ட முழுப்பார்வையையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கரிசல் வட்டார எழுத்தின் முதல்வர்
ஒவ்வொரு காலக்கட்டத்தில் தோன்றிய ஒவ்வொரு இலக்கியமும் அது தோன்றிய நிலப்பின்னனியையும், அந்நிலத்தில் வாழும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை இவற்றைத் தன்னுள் பதிந்தே வரும். இவ்வாறாகத் தோன்றிய இலக்கியங்களில் தமிழில் 19-ம் நூற்றாண்டுக்கு முன் அனைத்து தமிழ் மக்களுக்குமான வாழ்வியலைப் பொது நிலையில், பொதுமொழியில் பதிந்து வந்துள்ளன. ஆனால் 19, 20-ம் நூற்றாண்டில் இலக்கிய வகைகளிலும் கதை புனையும் மரபிலும், மொழிநடையிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அம்மாற்றத்தில் ஒன்றுதான் வட்டார இலக்கியம். இவ்வட்டார இலக்கியத்தின் முதல்வராக கி. ராஜ நாராயணன் அவர்களைக் குறிப்பிட முடியும். முதன்முதலாக கரிசல் வட்டாரத்தைப் பதிவு செய்தவர் கு. அழகிரிசாமி. அவரைத் தொடர்ந்து கரிசல் வட்டார மக்களை மட்டுமே தம்படைப்பில் படைத்திட்டவர் கி. ராஜ நாராயணன். அவருக்குப் பின் பூமணி, பா. செயப்பிரகாசம், முத்தானந்தம், வீர. வேலுச்சாமி, கோணங்கி, தமிழ்ச்செல்வன், எஸ். ராமகிருஷ்ணன், சொ. தருமன் போன்றோர் கரிசல் வட்டாரத்தை இலக்கிய வெளியில் பதிவிட்டு வருகின்றனர். கரிசல் வட்டார எழுத்தைப் போன்றே பிற வட்டார இலக்கியங்களும் தோற்றம் பெற்று வருகின்றன. அந்த வகையில் திருவனந்தபுரம் சாலைக்கடைப்பகுதி மக்களின் வாழ்வியலை ஆ. மாதவன் “சாலைக்கடைப் பகுதி இலக்கியம்” என்றும் குமரி மாவட்ட மக்களின் வாழ்வியலை நாஞ்சில் நாடனும் எழுதிவருகின்றனர். மேற்கண்டவைகள் மூலம் வட்டார இலக்கிய உருவாக்கத்தில் கி. ரா. மிக முக்கிய இடம் வகிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
கி. ரா படைப்பிலிருக்கும் கரிசல் மக்கள்
கி. ரா. வின் படைப்பிலிருக்கும் கரிசல் மக்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் தொழில் குறித்தும் கி. ரா பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இப்பகுதியில் வாழ்பவர்கள் ஆந்திராவிலிருந்து குடியேறிய மக்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசும் மக்கள். இங்கு விவசாயமே முக்கியமான தொழில். இந்தப் பகுதி நிலங்களின் விவசாய அமைப்பே விநோதமானது. மழை அதிகமாகிடவும் கூடாது! குறைந்து விடவும் கூடாது. இம்மண்ணின் முன்னேற்றத்திற்குத் தனித்திட்டம் வேண்டும். கரிசல் மாவட்டம் என்று தனியாகப் பிரிப்பது பயன்தரும். மேற்கண்டவைகள் மூலம் கி. ரா. தம் மண் மீதும், மக்கள் மீதும் கொண்டிருந்த அக்கறையை விளங்கிக் கொள்ளலாம்.
கி. ரா. வின் பன்முகத்திறன் கொண்ட படைப்பாளுமை
கல்வி அறிவைப் பள்ளிப்படிபின் மூலம் முறையாக பெறாத கி. ரா. தன் முதல் கதையை எழுதத் தொடங்கிய போது 30 வயது. சிரத்தையான வாசிப்பு மற்றும் தன் மண் சார்ந்தும், மக்கள் சார்ந்தும் கூர்ந்த கவனிப்பின் ஊடாகப் பெற்ற அனுபவத்தைத் தன் படைப்பினுள் கொண்டுவந்தவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, கரிசல் காட்டு கடுதாசி, கடிதங்கள், சொல்கதை, நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு என பல்வேறு படைப்பாளுமையின் வெளிப்பாடாக கி. ரா. மிளிர்வதைக் காணமுடிகிறது. ‘என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில், அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.” (கரிசல் காட்டு கடுதாசி நூலின் பதிப்புக் குறிப்பு) என்று கூறும் கி. ரா. தான் சொல்லியதைத் தன் படைப்புகளில் நிகழ்த்திக் காட்டியவர்.
தம் சிறுகதைக்குரிய வடிவமாகக் கி. ரா. புனைகதை மரபையும் நாட்டுப்புறக் கதை மரபையும் இணைத்துப் புதிய வடிவமாக உருவாக்குகிறார்.
கோமதியின் இளமைக் காலமும் ஏக்கமும்
முப்பது வயது மதிக்கத்தக்க கோமதி செட்டியாரின் கதையை கி. ரா. கதை சொல்லியாக இருந்து, அவன் இளைமைக் காலத்தையும், அவனுக்கு இருந்த விருப்பத்தையும் பின்வருமாறு கூறுகிறார். “அவனுக்கு முன்பிருந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடையோடு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை... பெண் குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான். ஆண்களோடு விளையாட வேண்டியது ஏற்பட்டு விட்டால் வீடுகட்டி, கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில் தான் பிரியம் அதிகம். அதிலும் மணப்பெண்ணாகத் தன்னை வைப்பதென்றால் தான், விளையாட வரச் சம்மதிப்பான். (கி.ரா. சிறுகதைகள் ப.24) எனக் கூறுவதிலிருந்து கோமதி செட்டியார் ஆண் உருவம் பெற்றிருந்தாலும், தன்னைப் பெண்ணாகவும், ஆண் உருவத்தை மாற்றிப் பெண்ணாகவே மாற வேண்டுமென்று விரும்பிய கோமதியின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்கள் மனதை தன்வயப்படுத்தும் பாங்கு
பெண்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்து வந்த கோமதி செட்டியார், பெண்கள் தன்னையும் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளவும் தான் அவர்களுடன் பழகவும் வேண்டுமானால் பெண்களுக்குப் பிடித்தமான விடயங்களைக் கற்றுக்கொண்டு அவர்களைத் தன்வயப்படுத்த “ஆண், பெண் சம்பந்தமான பால் உணர்ச்சிக் கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விப்பான். மனசைத் தொடும்படியான ஒப்பாரிகளைப் பாடி அவர்களின் கண்ணீரை வரவழைப்பான். இவனுக்கு ஒரே ஒரு கலை அற்புதமாகக் கை வந்திருந்தது. சமையல் பண்ணுவதில் இவனுக்கு நிகர் இவனேதான். (கி.ரா.சிறுகதைகள் ப.24) என்று கி. ரா கூறுவதன் மூலம் அவன் மனம் பெண்மையுடன் இருப்பதற்காக அவர்களுக்குப் பிடித்தமானதையே தனக்கு பிடித்தமானதாக மாற்றிக் கொண்டான் என்பதும் புலனாகிறது.
பெண்மையை ரசிக்கும் மனம்
உலகில் ரசிக்க எவ்வளவோ இருந்தாலும், கோமதியின் மனம் என்னவோ பெண்களுக்கு அழகைத் தரும் அல்லது அடையாளத்தைத் தரும் (புடவை,வளையல்) பொருட்களின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவனாக இருந்தான். என்பதனைப் ‘பட்டுச் சேலைகளின் சரசரப்பும் வியர்வையோடு கலந்த மல்லிகைப் பூவின் சுகந்த நெடியும் கோமதியைக் கிறங்க அடித்தது... யக்கா... இந்தச் சேலை என்ன விலை... ? ... யக்கா உனக்கு இந்தச் சேலை ரொம்ப நல்லாயிருக்கு...
கோமதிக்கு, சுலோ தன் வலதுகை நிறைய அணிந்திருந்த வளையல்கள் மீது தான் கண்ணாக இருந்தது. (கி. ரா. சிறுகதைகள் ப.25) என்ற வரிகளின் வழி கோமதி செட்டியாரின் மனம் பெண்ணுக்குரியதையும், பெண்மையையும் விரும்பியதை அறிய முடிகிறது.
பெண் என்ற அங்கீகாரத்திற்கு ஏங்கும் மனம்
ரகுபதி நாயக்கரின் வீட்டிற்கு சமையல்காரனாகச் சென்ற கோமதியின் உணவை உண்ட ரகுபதி நாயக்கர். இந்தப் புதுச் சமையல்காரனைப் பார்க்க வேண்டும் என்று தன் அறைக்கு அழைத்தார். அறையினுள் சென்ற கோமதி செட்டியாரைக் கண்டதும் ரகுபதி நாயக்கர், “ஆகாயத்தை நோக்கிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். பலே, பலே வா இங்கே . உன் பேர் என்ன? ‘கோமதி’ கோமதியோ ! பேஷ் பேஷ்...!” என்று கூறியவர் தன் பீரோவைத் திறந்து ஒரு ஜோடி பட்டுக்கரை வேஷ்டிகளைக் கொடுத்தார். ஆனால் கோமதி செட்டியார் இதுவரை அதைக் கட்டவே இல்லை. இந்நிகழ்வின் மூலமாக அந்த பரிசுப்பொருள் ஆணிற்கு உரியது. அதுவே பெண் சார்ந்த பொருளாக இருந்தால் அதிகம் சந்தோப்பட்டிருப்பாள். இந்த இடத்திலும் கோமதிசெட்டியாரின் மனம் பரிசையும் மறுத்து பெண் என்ற அங்கீகாரத்திற்கு ஏங்குவதனை அறிய முடிகிறது.
ஆண்துணை தேடும் மனம்
ரகுபதி நாயக்கரின் மகன் ரகு என்பவன் வெளியூரிலிருந்து வீட்டிற்கு வருவதை அறிந்த கோமதிசெட்டியார், தன் காதலன் வருவதைப் போல் உணருகிறான். எவ்வளவுதான் பெண்கள் தன்னுடன் இருந்தாலும் தனக்கென்று ஓர் ஆணின் துணை வேண்டும் என்று ஏங்கிய கோமதிசெட்டியாரின் மனத்தினை “ ரகுவைப் பார்த்த கோமதிக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. முதலில் அதிர்ச்சியாயிருந்தது. மலமலவென்று கண்களை மூடித்திறந்தான். திடீரென்று எங்கேயும் இல்லாத வெட்கம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. (கி.ரா. சிறுகதைகள் ப.26) என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.
கேலி அவமானத்தின் போது
எல்லா மாற்றுப் பாலினத்தாரையும் இந்தச் சமூகம் எப்படிப் பார்த்ததோ அதே போல் தான் கேலியும் அவமானமும் கோமதி செட்டியார்க்கும் இருந்தது. இதனை கோமதிசெட்டியார், ரகுபதி நாயக்கரின் மகன் ரகுவை முதன்முதலாக பார்க்கச் செல்லும் போது பால் கொண்டு செல்கிறான். இவனது தோற்றத்தைக் கண்டு “திரும்பிப் பார்த்தான். முகத்தைச் சுழித்தான். இந்த ரசவிஹாரத்தை அவன் ஆண்மை நிறைந்த உள்ளத்தால் தாங்க முடிவில்லை.(கி.ரா.சிறுகதைகள் ப.27) என்ற வரிகள் மூலம் அந்தச் சமூகம் மாற்றுப்பாலினத்தவர் மீது கொண்ட பார்வையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஓர் ஆணிற்கு மனைவியாகப் பணிவிடை செய்ய ஏங்கும் மனத்தினை கோமதி செட்டியார் ரகுவை கணவனாகவே கருதுகிறாள். அவனுக்கு மனைவியாக எல்லா பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். இதனைக் கதையின் பல இடங்களில் காண முடிகிறது. குளிப்பறையில் ரகுவுக்கு தண்ணீர் எடுத்து வைத்தான் சோப்பும் துவாலையும் கொண்டு வைத்தான்... உங்களுக்கு நான் முதுகு தேய்க்கிறேனே... என்ற வரிகளில் கோமதிசெட்டியாரின் மனோநிலை என்ன என்பதனைக் கதையாசிரியர் காட்டுகிறார்.
இறுதியில் கோமதிசெட்டியாட் ரகுவால் ஓங்கி அறையப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறான். பல்வேறு மனவேதனைகளுக்குப் பிறகு கதையின் நிறைவில் கோமதிசெட்டியார் ரகு இல்லாத ஏக்கத்தில் ரகுவின் புகைப்படத்தை முன்வைத்து, தன்னை முழுவதுமாகப் பெண்ணாக மாற்றிக் கொண்டு அழுது புலம்புவதாகக் கதையை நிறைவு செய்துள்ளார். அக்கதையின் ஊடாக கோமதிசெட்டியார் என்கிற கதாபாத்திரத்தின் மூலமாக, அவர் காலத்தில் மூன்றாம் பாலினத்திற்கு இருந்த சமூக மதிப்பையும், அவர்களின் மனநிலையையும் அறிய முடிகிறது.
முடிவாக
கி. ரா. இயல்பாகவே தன் மண் சார்ந்த மக்களை பதிவிடுதலில் ஆர்வம் கொண்டவர் என்றும், தன் படைப்பாளுமையை எவ்விதம் வெளிப்படுத்தினார் என்பதனையும், கரிசல் காட்டு வட்டார இலக்கியத்தின் தந்தையாக விளங்கும் இவா; 1964-லேயே பதிவிட்டு சு. சமுத்திரத்தின் வாடமல்லி போன்ற அரவாணிகள் இலக்கியம் என்ற வகைமைக்கு முன்னோடியாகத் தன் பங்களிப்பை அளித்துள்ளார். கரிசல் வட்டார மக்களை முழுமையாகப் பதிவிட்ட இவரின் எழுத்து, வாழ்க்கை, மூன்றாம் பாலினத்தை பதிவிட்டதில் முழுமை அடைகிறது. மாற்றுப்பாலினத்தின் மனவெளியைக் காண எத்தனித்த இக்கட்டுரை மாற்றுப் பாலினத்தைப் பதிவிட வேண்டும் என்ற படைப்பாளியின் மனவெளியையும், கதையின் நாயகன் மற்றும் நாயகியாக திகழும் கோமதியின் (மாற்றுப் பாலினம்) மனவெளியையும், கதைக்குள் வரும் ஏனைய கதாப்பாத்திரங்களின் மாற்றுப்பாலினம் குறித்த மனவெளியையும், இக்கதையை வாசிக்கும் வாசகன் அக்காலச் சமூகம் மாற்றுப்பாலினம் குறித்து கொண்டிருந்த புரிதலையும், பார்வையையும், சமகால மூன்றாம் பாலினத்தோடு பொருத்திப்பார்க்கும் போது வெளிப்படும் மனநிலையையும் விளக்கி நிற்கிறது.
பார்வை நூல்கள்
1. கரிசல் காட்டு கடிதாசி, கி. ராஜநாரயணன்.
2. கி. ராஜநாரயணன் சிறுகதைகள், அன்னம் பதிப்பகம்.
3. கி. ரா. சிறுகதை படைப்பாளுமை, கி. மங்கையர்கரசி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.