Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பாம்பன் சுவாமிகள் போற்றிய பிரப்பன் வலசை

ஞா. செல்வகணபதி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம்,,
புதுச்சேரிப்பல்கலைக்கழம், புதுச்சேரி.


முன்னுரை

முருகஅடியார்கள் பலர் தமிழகத்தில் தோன்றி முருகனின் பெருமைகளையும் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் அவர்களின் அனுபவத்தையும் மந்திரங்கள் வாயிலாகவும் பாடல்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தி வந்தனர். அவர்களில் அருணகிரிநாதர், வள்ளல் இராமலிங்க அடிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் போன்றோர் ஆவர். அவர்களில், அறுமுகச் சிவனாம் ஸ்ரீ குமாரபரமேஸ்வரனையே முழுமுதற் கடவுளென நினைந்து வழிபாடியற்றியும் அப்பெருமானைத் தலைவனாக முன்னிறுத்தியும் பக்திப்பாக்களைப் புனைந்தும் அன்பே வடிவமாய் அமர்ந்தவர் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆவார். ஸ்ரீகுமார பரமேஸ்வரனை துதித்துத் திருப்புகழ் அருளிய ஸ்ரீ அருணகிரிநாதரை தம்குருவாக ஏற்று அவரை தம் பாடல் தோறும் சிறப்பித்து கூறியுள்ளார்கள். பாம்பன் சுவாமிகள் என்றழைக்கப்படும் குமரகுருதாச சுவாமிகள் போற்றிய பிரப்பன் வலசை என்ற பதிகத்தை ஆய்ந்தறியும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கைச் சுருக்கம்

தென் தமிழகத்தின் புண்ணியத்தலமான இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள பாம்பன் என்னும் சிற்றூரில் சிவத்திரு சாத்தப்பப்பிள்ளை, செங்கமல அம்மாள் ஆகியோருக்கு அருந்தவப் புதல்வனாக கி.பி 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். சிவக்கொழுந்தாகத் தோன்றிய திருக்குழந்தைக்கு அப்பாவு என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முனியாண்டியாப் பிள்ளை என்பாரிடம் தமிழ்க்கல்விப் பயின்றார். பள்ளிக் கல்வியுடன் முறையாகத் தமிழ்மொழியும் வடமொழியும் நன்கு கற்றுத் தேர்ந்தார். கருவிலே திருவாய்க்கப்பெற்ற சுவாமிகள் இளம் பருவத்திலேயே குமரக்கடவுள் மீது மாறா பக்தி கொண்டு வணங்கினார்.

இவர்தம் முதல் பாடல் “கங்கையைச் சடையிற் பிரித்து” எனத் தொடங்குவதாகும். இதனைத் தொடர்ந்து பற்பல பாடல்களைக் குமாரக்கடவுள் மீது இவர் பாடியுள்ளார். தம் வாழ்க்கைத் துணையாகக் காளிமுத்து அம்மையாரை மணந்து முத்தான மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானார். இவரின் இல்லற வாழ்வில் முருகக்கடவுள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இவரின் துணையாளுக்கும் முருகன் துறவிக் கோலத்தில் அருள் புரிந்துள்ளார். இல்லறத்தில் இருந்து கொண்டே முருகப்பெருமானை மனத்தகத்தில் இருத்தி குகேசனாக வழிபாடியற்றியுள்ளார். தமக்குற்ற துயரினைக் களையும் பொருட்டு “சண்முகக்கவசத்தை” இயற்றியுள்ளார். இன்றும் இதன் ஆற்றலை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். அடுத்ததாக “பரிபூஜன பஞ்சாமிர்த்த வண்ணம்” என்னும் ஐந்து பாடல்களை இயற்றியுள்ளார்கள். இப்பாடல்கள் மனத்தால் முருகக்கடவுளை வழிபடும் பாக்களாகும். இப்பாடலை ஒரு முறை ஓதின் முருகப்பெருமானுக்கு ஐந்து பொருட்களால் அபிடேகம் நிகழ்த்திய பலன் கிடைக்கும் என்று சுவாமிகள் கூறியுள்ளார். பழநி முருகனான தண்டாயுதபாணியை தம் ஞான தெய்வமாக வணங்கியுள்ளார்.

பின்னர் பிரப்பன் வலசையில் 35 நாட்கள் கடும் தவமியற்றினார். 1929ல் திருவான்மியூரில் “குகசாயுச்சய” நிலையை எய்தினார். இவரியற்றிய சாத்திர, தோத்திரப் பாக்கள் 6666 ஆகும். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுவாமிகள் துவக்கிய ஸ்ரீ மகாதேஜோ மண்டல அடியார்கள் சபை இன்றளவும் சுவாமிகளின் வழிபடு கடவுளான ஸ்ரீ குமாரபரமேஸ்வரனையும் சுவாமிகள் இயற்றிய பாக்களையும் போற்றி வருகின்றனர்.


பிரப்பன் வலசை திருத்தலம்

பாம்பன் சுவாமிகள் தமது 46 ஆவது வயதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன் வலசை என்னும் ஊரினைத் தவம் புரியத் தேர்வு செய்து, உரிய அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று அவ்வூரில் உள்ள மயான பூமியில் ஒரு குழி அமைக்கச் செய்தார். “குமரவேளைத் தரிசித்தால் அன்றி இனி மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று சூளுரைத்துத் தவத்தைத் தொடங்கினார். ஆறு நாட்கள் பழநிக் கடவுளை உள்ளத்தில் நிறுத்திக் கடும் தவம் புரிந்தார்.

ஏழாம் நாளில் தண்டாயுதபாணியின் தரிசனத்தையும், ஓரெழுத்து உபதேசத்தையும் பெற்றார். பழநிக்கடவுளுடன் அகத்தியரையும் அருணகிரியாரையும் கண்டு தரிசித்தார். பின்னரும் சுவாமிகள் 28 நாட்கள் பதி நிட்டையில் இருந்தார். ஒரு அசரீரியின் ஆணையினால் தவத்தில் இருந்து மீண்டார். தம் மனமடங்கி இறைக்காட்சி தோன்றிய இடமான பிரப்பன் வலசைத் தலத்தை மகிழ்ந்துப் பாடியுள்ளார்.

பிரப்பன் வலசைச் சிறப்பு

“எத்தனையோ தலம் சுற்றி வந்தேன் மனம் எட்டுணையும்
அத்தன் குமாரன் முருகனை நாட அடங்கவில்லை
பக்தர்கள் வாழ் பிரப்பன் வலசைச் செம்பதி தனிலே
சத்தியமாகக் கைகூடினதால் இனித் தாழ்வில்லையே!!” (திருக்கோயில்கள், கட்டளைக்கலித்துறை தனிப்பாடல்)

என்று கூறுகிறார். பிரப்பன் வலசைத் தலத்தின் சிறப்பினையும், தாம் பெற்ற இறையனுபவத்தையும், சிவனும் முருகனும் ஒன்று என்ற தன்மையினையும், தாம் மேற்கொண்ட தவமுயற்சியையும், தம் மனத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும், தம் குருவான அருணகிரிநாதப் பெருமானையும், அவ்வூர் மக்களுக்கு நன்றி நவின்றதையும் இப்பத்துப் பாடல்களில் விளக்கியுள்ளார்.

பிரப்பன் வலசையில் முருகனின் திருவருளால் மட்டுமே சில நாட்கள் பதிநிட்டையில் கூடி இறையனுபவம் பெற்ற செய்தியையும், இறைவனால் உருவாக்கப்பட்டு அழகும் மணமும் பொருந்திய வண்டுகளால் சூழப்பட்ட பூக்கள் அதிகம் கொண்ட ஊர் இதுவாகும்.

“...ஆதி முருகையர் அருள் நாம்
கொண்டு சில வைகல் வதி தந்த இடம் என்று
உயர்வு கூறும் அடர்பூ
வண்டுஅறை பிரப்பன் வலசைப் பதி இதாகும்” (பிரப்பன் வலசை : 2)

நாம் கடவுளை நினைத்துப் பேசும் பேச்சை விட்டு மௌனம் கொண்டு மனம் அடங்கும் நிலையைக் கண்ட தலம் இதுவாகும். இதனை;

“ஓதும் மொழி விட்டு அகம் ஒடுங்கும் நிலை கண்ட
இடமென்று குயிலும் -
கோதறு பிரப்பன் வலசைப் பதியிதாம்” (பிரப்பன் வலசை : 4)

என்று கூறுகிறார்.


எங்கும் கிட்டாத மனதிற்கு நல்ல நினைவை அருளிய பெருமை இந்த பிரப்பன் வலசையில் தான் என்று சொல்லப்படுவதை,

“...நம் கடவுள் நல்நினைவு தந்த தகைமை
இங்கு என விளம்பிடு பிரப்பன் வலசை களரி ஈது” (பிரப்பன் வலசை : 6)

மேலும் முருகனின் அருள் ஒன்றையே நன்று நினைத்து மனம் அடங்கும் உணர்வினைக் கண்ட ஒப்பற்ற தலமாகும். இத்தலத்தை தரிசிக்கச் சென்றவரும் இங்குத் தங்குவோரும் முருகன் மீது பக்தி உடையவராவர் என்பதனை;

“ஒன்றை நனி உன்னி உள் ஒடுங்க
உணர்வு கண்ட ஓர் பிரப்பன் வலசை
சென்றவர் இருந்தவரும் அன்புடையர் ஆவர்” (பிரப்பன் வலசை : 9)

இவ்வாறாக இறையாற்றல் நிரம்பியத் தவப்பூமியாக விளங்கும் பிரப்பன் வலசையையும், அவ்வூரில் உள்ளவர்களும் அவ்வூரைத் தரிசிக்க சென்றவர்களும் முருக அடியார்களே என்று மிக உயர்வாகப் போற்றியுள்ளார்.

இறைவன் சிறப்பு

இறைவனைச் சிறப்பித்துப் பாடும் பொழுது ஒருமையில் பாடாமல் மேலான தன்மையை நோக்கி முருகையர் என்றும், நான் எனது என்றில்லாமல் இறைவன் எல்லாருக்கும் பொதுவான நிலையை நம் கடவுள் என்றும் விளித்துப் பாடியுள்ளார். மேலும் நம் ஐயடிகள், முருகையர் என்று பன்மையில் போற்றியுள்ளார்.

திருமகள் உலாவும் இம்மண்ணுலகில் நல்ல தமிழ்ப்புலவர் பாடுகின்ற கவிதைகளைப் பாமாலையாக மகிழ்ந்து அணியும் நம் கடவுள் முருகப்பெருமான் என்று,

“பூமகள் இயங்கு உலகில் நல்ல தமிழ்
நாவலர் புலம்பு கவிதைத்
தாமம் அணி நம் கடவுள் என்னும் முருகையர்...” (பிரப்பன் வலசை : 1)

எங்கு இறைவன் வீற்றிருப்பார்? தொண்டர்களின் மனத்தில் நிலைபெற்றிருப்பவன். நல்ல பக்தி பூண்டு மனத்தை தூய கோவிலாக வைத்துள்ள உண்மையான தொண்டர்களின் மனத்தகத்தில் குடிகொண்டிருக்கிறார்.

உயருகின்ற திருவருளின் அன்பு தமக்குச் சொந்தமாக வேண்டும் என்று தேவர்கள் மலர் கொண்டு பூசை செய்யும் ஆதியான முருகையர்.

“தொண்டர் அகம் நின்று நிமிர்கின்ற
அருளின் பரிவு சொந்தம் உறவென்று
அண்டர் அலர் கொண்டு புசிதம்
புரியும் ஆதி முருகையர்” (பிரப்பன் வலசை : 2)

மனிதனை மாமனிதனாக உயர்த்த பலவித சோதனைகளைத் தந்து ஆட்கொள்பவன். இச்சோதனைகளும் திருவிளையாடல்களும் தக்க ஞானிகளுக்கும் முனிவர்களுக்கும் அவரின் மனத்துள்ளே நிகழ்த்தும் மெய்ப்பொருளானவன்.

“மெய்யடிகள் நெஞ்சகம் இருந்து விளையாடி
அருள் மெய்யர் எனும் நம்
ஐயடிகள் ஆம் முருகவேள்” (பிரப்பன் வலசை : 3)


ஐம்முகச்சிவனும் அறுமுகச் சிவனும் ஒன்றே

குளிர்ந்த பிறை நிலவைச் சடையில் சூடியவரும் மலர்களையே அம்பாகக் கொண்டுள்ள மன்மதனின் உடல் வெந்து சாம்பலாகும்படி நெற்றிக் கண்ணைச் சிறிது காட்டியவருமாகிய ஆதியான இறைவனான குருசாமி என்று கூறப்படும் நம் கடவுள்;

“சீத மதியைச் சடையில் வைத்து மலர் வாளி
உடல் தீய விழி செய்
ஆதி இறை ஆய குருசாமி எனும் நம் பரன்” (பிரப்பன் வலசை : 4)

அடைக்கலம் என உன் முன்னே நிற்பவர்களுக்கு அஞ்சாதீர் என்று ஆறுதல் மொழி தந்து அருள் புரியும் நம்முடைய சிவபிரான் எனப்படும் மயில்வாகன முருகையர்

“தஞ்சம் என நிற்பவர்கள் அஞ்சன்மின் எனச்
சொல் உரை தந்து அருள்புரி
நம் சிவபிரான் எனும் மயூர முருகையர்” (பிரப்பன் வலசை : 5)

பாம்பன் சுவாமிகளின் தவ அனுபவம்

முருகப்பெருமானின் திருவடிகளைத் தியானித்துத் தனிமையில் இருந்து அன்பு நீர் பொழியும் இரண்டு கண்களையும் மூடிக் குழிக்குள்ளே இருந்து ஞானத்தைப் பெற்ற தலம் என்பதனை,

“ஐயடிகள் முருகவேள் அடி நினைந்து
தனியாகி அளிநீர்
பெய் இருகண் மூடி உள்ளிருந்து உணர்வு
கொண்ட பிரப்பன் வலசை” (பிரப்பன் வலசை : 3)

இரவும் பகலுமாக குழிக்குள்ளே தவம் செய்த பொழுது முருகப்பெருமான் தோன்றி சுவாமிகளின் இருதயத்தாமரையில் மனத்தை நிற்கச் செய்யும் நிலையைச் சொல்லி மறைந்தார்.

“வள்ளல் முருகையர் நடுநிற்கும் நிலையை
சொல்லி மறைந்த இடமும்” (பிரப்பன் வலசை : 7)

பிரப்பன் வலசைப்பதிகத்தில் மனம்

‘சகல காரியங்களுக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம். மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன’ என்கிறார் இராமகிருஷ்ண பரமஅம்சர். பாம்பன் சுவாமிகளும் தகராலய ரகசியம் என்கிற நூலில்,

“... மனமே சமலமும் மனமே நிமலமும்
மனமே வளியொடு வெளியாகும்
மனமே சிறுமையும் மனமே பெருமையும்
மனமே இருமையும் ஒருமையுமே” (தக- இர-17)

பிறப்புக்கும் இறப்பும், சிறுமைக்கும் பெருமைக்கும் என உலகில் நடைபெறும் அனைத்துக்கும் மனம் தான் காரணம் என்கிறார்.

மனம் தூய்மையாக இருப்பதே அறம். என்பதை வள்ளுவப்பெருந்தகை சுட்டுகிறார்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”(குறள்: 34)


இத்தகைய மனத்தை இறைவன் பால் செலுத்தும் முறையினையும் சுவாமிகளின் மனம் சார்ந்த அனுபவங்களையும் மையப்படுத்திக் கூறும் பொழுது,

1. பொதுவாக நல்ல மனிதர்களின் மனமானது பழி பாவங்களுக்கு அஞ்சி செய்யக்கூடாதச் செயலைத் தவிர்த்துச் செயல்படும். இந்நிலையில் உலகியல் சிந்தனையுடன் தம் மனதைத் தொடர்புப்படுத்தி சுவாமிகள்

“பழியஞ்சு மனதே” (பிரப்பன் வலசை : 1)

2. சிந்தை வேறு செயல் வேறு இல்லாமல் மனமானது தமக்குள்ளே நெருக்கமாக இருந்த தன்மையை,

“என் உண் மல்கு மனதே” (பிரப்பன் வலசை : 2)

3. மனமானது மெய்ப்பொருளாம் இறைவனை அடைய விரும்பும் என்பதை,

“மெய்யறிவை நாடிடு திறத்த மனதே” (பிரப்பன் வலசை : 3)

4. அம்மெய்ப்பொருளை அடைய மனம் உறுதியாக இருப்பதை,

“உறுதி கொண்ட மனதே” (பிரப்பன் வலசை : 4)

5. உறுதியின் காரணமாக அறியாமை அகன்றதை,

“மடமை விட்ட மனதே” (பிரப்பன் வலசை : 5)

6. அறியாமை அகன்றதால் மனம் மகிழ்ந்ததை,

“உவகை உந்து மனதே” (பிரப்பன் வலசை : 7)

7. எந்நிலையில் வைக்கின்றேனோ அந்நிலையில் மனமானது செயல்படும் என்பதனை,

“வைத்த நிலை நிற்கும் என் ஏது இன் மனதே” (பிரப்பன் வலசை : 8)

8. மனமானது குற்றம் இல்லாத போது தெய்வத் தன்மை அடையும் என்பதை,

“தெய்வ மனதே” (பிரப்பன் வலசை : 9)

9. மனமானது தெய்வத்தின் இருப்பிடமான பிறகு, தலைவரான முருகையரை பற்றிக் கொண்டது என்பதை,

“பதி பிடித்த மனதே” (பிரப்பன் வலசை : 10)

இவ்வாறாக மனமானது பல படி நிலைகளைக் கடந்து இறைவனாம் முருகனை அடைந்த விதத்தைச் சுவாமிகள் விவரித்துள்ளார்.

இறைவனை உணர்ந்துதான் அறிய முடியுமே தவி,ர தேடி அடைதல் என்பது முடியாது. அத்தகையத் தேடி அடைதற்கு அரிய தெய்வமாக விளங்குபவன் முருகன். முருகனும் சிவனும் ஒன்றெனப் பல பாடல்கள் பாடியருளினார் அருணகிரிநாதர். அவர் தரிசித்த முருகனின் இரண்டு தாமரைத் திருவடிகளைத் தாம் அடைவதற்கு மேற்கொண்ட பதி நிட்டை என்னும் செயலுக்கு உதவி செய்த நல்லோர் பெருமை பெற்று வாழும் தலம் இதுவாகும் என்று அருணகிரிநாதரைப் போற்றியும், பிரப்பன் வலசை ஊர் மக்களுக்கு நன்றி நவின்றும் இப்பதிகத்தை யாத்துள்ளார்.

துணைநூற் பட்டியல்

1. திருக்குறள் - பாரி நிலையம், சென்னை.

2. திருவலங்கற்றிரட்டு - பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.

3. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச்செய்த முதல் மண்டலம் - விளக்க உரையுடன் - உரையாசிரியர் முனைவர் ப. இராமன்

4. “பாராயண பாமாலை” - புவனகிரி மஹாதேஜா மண்டலம் வெளியீடு.

5. “முருகக்கடவுள்” - சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ இராமகிருஷ்ண தபோவனம், திருப்பராயத்துறை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p153.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License